2011-03-30 15:29:29

அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மதஉரிமைகள் வழங்கப்பட வேண்டும் - கர்தினால் Theodore McCarrick


மார்ச் 30,2011. அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், சிறப்பாக இந்த உரிமை அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வாஷிங்க்டன் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Theodore McCarrick கூறினார்.
"அமெரிக்க இஸ்லாமியர்களின் குடியுரிமைகளை காப்பது" குறித்து அந்நாட்டின் நீதித் துறை பலரது கருத்துக்களைக் கேட்பதில் ஒரு உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் முன் இச்செவ்வாயன்று பேசிய கர்தினால் McCarrick, இஸ்லாமியரின் மத உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற தன் கருத்தை வெளியிட்டார்.
சமய உரிமை என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை இந்த உலகமும், சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாடும் உணர வேண்டும் என்று கர்தினால் McCarrick வலியுறுத்தினார்.
ஒரு சில இஸ்லாமிய அடிப்படை வாதக் குழுவினரால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு குலைக்கப்பட்டாலும், இது உண்மை இஸ்லாமியக் கொள்கைகளுக்குப் பெரிதும் முரணானது என்பதை உணர வேண்டும் என்று கர்தினால் McCarrick சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராய் கொண்டிருக்கும் நாடுகள் அங்குள்ள சிறுபான்மையினரை சரிவர நடத்துவதற்கு தவறி வரும் இவ்வேளையில், அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியருக்கு நாம் தகுந்த பாதுகாப்பும், சம உரிமைகளும் வழங்கி இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு மாதிரிகையாக இருக்க வேண்டும் என்று கர்தினால் Theodore McCarrick கேட்டுக் கொண்டார்







All the contents on this site are copyrighted ©.