2011-03-30 15:34:26

அணுசக்தி நிலையத்தைக் கண்காணிக்கும் உரிமையைத் தலத்திருச்சபைக்கு வழங்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள்


மார்ச் 30,2011. தென் கொரியாவில் உள்ள ஒரு முக்கிய அணுசக்தி நிலையத்தைக் கண்காணிக்கும் உரிமையைத் தலத்திருச்சபைக்கு வழங்க வேண்டுமென்று தென் கொரிய ஆயர்கள் அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தென் கொரியாவின் Kwangju உயர் மறைமாவட்டத்தில் அந்நாட்டிலேயே மிகப் பெரியதெனக் கருதப்படும் Yonggwang அணுசக்தி நிலையம் அமைந்துள்ளது. 1978ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த இந்த அணுசக்தி மையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தலத் திருச்சபையையும் அரசு ஈடுபடுத்த வேண்டுமென்று அம்மறை மாவட்டத்தின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் சார்பாக கடிதம் ஒன்று இத்திங்களன்று அந்நாட்டின் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தைத் தொடர்ந்து தென் கொரியாவின் 12 பகுதிகளில் அணுக்கதிர்வீச்சு சக்தி வாய்ந்த அயோடின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தொடர்ந்து, Kwangju உயர் மறைமாவட்டம் இவ்விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது.
அணுசக்தியைப் பயன்படுத்துவதில் உலகில் ஆறாவது இடத்தில் உள்ள தென் கொரியா, தற்போது 21 அணுசக்தி நிலையங்களை வர்த்தக ரீதியில் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.