“‘நானும்
ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்’
என்று திருப்பாடல் ஆசிரியரைப் போல் பெருமையோடு சொல்லும் பக்குவம் பெற இறையருளை
வேண்டுவோம்.” என்று சென்ற தேடலை நாம் நிறைவு செய்தோம். இறைவன் இல்லத்தில்,
இறைவன் கண்காணிப்பில், இறைவனோடு வாழும் பக்குவம் என்பது என்ன, இப்பக்குவத்தை எவ்விதம்
பெறுவதென்று இன்றையத் தேடலில் சிந்திப்போம்.
இல்லம், வீடு ஆகிய வார்த்தைகளுக்கு
ஆங்கிலத்தில் House மற்றும் Home ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். Home என்பது
உள்ளங்கள் சேர்ந்து உருவாக்கும் ஒரு கூட்டுணர்வை, குடும்ப நிலையைக் குறிக்கிறதென்று கூறினோம்.
Home என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் மற்றொரு அழகான அர்த்தமும் உண்டு. To be at home,
To feel at home என்று சொல்லும்போது, பாதுகாப்பான ஒரு சுதந்திர நிலையை அல்லது உணர்வைப்
பற்றி பேசுகிறோம்.
பிறர் நம்மைக் கண்காணிக்கின்றனர், நம்மைக் கணிக்கின்றனர் என்ற
கவலை எதுவும் இல்லாமல், நாம் நாமாக, இயல்பாக இருப்பதையே feeling at home என்ற சொற்றொடர்
குறிக்கிறது. பாடும் திறமை அதிகம் இல்லாத ஒரு சிலர் பாத்ரூமில், குளியலறையில் மனம் விட்டுப்
பாடுகிறோமே... உண்மையான நண்பர்கள் மத்தியில் எந்தக் கூச்சமும் இல்லாமல் குழந்தையைப் போல்
பாடி, ஆடி மகிழ்கிறோமே... அந்த நேரங்களில் நாம் உணரும் சுதந்திரத்தைத் தான் To be at
home, To feel at home என்ற சொற்றொடர்களால் கூறுகிறோம்.
வழக்கமாய் இந்த சுதந்திர
உணர்வை அவரவர் இல்லங்களில் அதிகம் உணர்வோம். அதிலும், இந்தச் சுதந்திரத்தை மிக அதிகமாக
உணர்வது, பயன்படுத்துவது குழந்தைகள்தான். குழந்தையொன்று வீட்டின் தரையில், சுவர்களில்
தன் ஓவியத்திறனை வெளிப்படுத்துவதை ஒவ்வொரு குடும்பத்திலும் நாம் பார்த்திருக்கிறோம்.
சில நேரங்களில் இக்குறும்புகளைக் குழந்தைகள் செய்யும்போது, "நீ செய்றத நான் பாத்துகிட்டுத்
தான் இருக்கேன்" என்று பெற்றோர் சொல்வார்கள். அதைக் கேட்டு, இன்னும் அதிக குதூகலத்துடன்
குழந்தைகள் தங்கள் குறும்பைத் தொடர்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். மனதில் இந்த அனுபவத்தைப்
பின்னணியாக வைத்துக் கொண்டு “நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்)
வாழ்ந்திருப்பேன்.” என்ற வார்த்தைகளை நாம் எண்ணிப் பார்க்கலாம்.
ஆண்டவரின் இல்லத்தில்
இதுபோன்ற சுதந்திரத்தை நாம் அனுபவிக்க முடியுமா? "நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்"
என்று கடவுள் தன் கண்காணிப்பை நமக்கு உணர்த்தும்போது, அது நமக்குள் சந்தோசம் தருமா, அல்லது
சங்கடம் தருமா? இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் நமக்கும் கடவுளுக்கும்
இருக்கும் உறவு எந்த நிலையில் உள்ளது என்பதை முதலில் தீமானிக்க வேண்டும். நாம் குழந்தை
நிலையிலும் கடவுள் நமது பெற்றோர் நிலையிலும் இருக்கின்றோமா? அல்லது, நாம் வளர் இளம் பருவம்
அதாவது Adolescents என்ற நிலையில் கடவுளோடு பழகுகிறோமா? அல்லது, Adult to Adult என்று
முதிர்ச்சி அடைந்த நிலையில் கடவுளுடன் பழகுகிறோமா? இந்த மூன்று நிலைகளில் நாம் எந்த நிலையில்
இருக்கிறோம் என்பதைப் பொறுத்து, அவரது இல்லம், அவரது தொடர்ந்த கண்காணிப்பு நமக்கு சந்தோசம்
தருமா, சங்கடம் தருமா என்பதைக் கணக்கிட முடியும்.
குழந்தைக்கு வீடு ஒரு விளையாட்டுத்
திடல். சுதந்திரமாய்ச் சுற்றித் திரியும் குழந்தை, அவ்வப்போது பெற்றோரின் கவனம் தன் மீது
இருக்கிறதா என்பதையும் பார்த்துத் தெரிந்து கொள்ளும். சுவரில் கிறுக்குவது, தொலைபேசி,
தொலைக்காட்சி பெட்டி, கம்ப்யூட்டர் இவைகளைப் பயன்படுத்துவது, நாளிதழைக் கிழிப்பது, உறவினர்
தரும் பொருளை இடது கையால் வாங்குவது போன்ற பல செயல்களில் ஈடுபடும் குழந்தைக்கு தான் செய்வது
நல்லதா, கேட்டதா என்ற அளவுகோல் கிடையாது. பெற்றோரின் அனுமதி உண்டா இல்லையா என்பது மட்டுமே
குழந்தையின் அளவுகோல். குழந்தையைப் பொறுத்தவரை பெற்றோரின் கண்காணிப்பில் இருப்பது பாதுகாப்பான,
சந்தோசமான, சுகமான, நிம்மதி தரும் ஓர் அனுபவம். அதைத் தாண்டி, குழந்தைக்கு எதுவும் அதிகம்
தெரியாது.
இதே குழந்தை வளர் இளம் பருவத்தில், அதாவது, Adolescent வயதில் அடியெடுத்து
வைக்கும்போது, இதே பெற்றோரின் கவனம் சந்தோசத்திற்குப் பதில், சங்கடத்தைத் தரும். வளர்
இளம் பருவத்தில் நுழையும் சிறுவன், அல்லது சிறுமிக்கு உலகமே தன்னைக் கண்காணிப்பதை போன்ற
உணர்வு உண்டாகும். அதுவரை அம்மா, அல்லது அப்பா சொன்னதைக் கேட்டு வாழ்ந்தவர்கள், இனி தனித்து
முடிவுகள் எடுக்க முயல்கிறார்கள். அந்த முடிவுகள் சரியா தவறா என்ற குழப்பம் வேறு. தன்னையொத்த
மற்ற இளையோர் சொல்வதும், செய்வதும் அவர்களுக்கு ஒரு முக்கிய அளவுகோல் ஆகிறது. இந்தப்
பருவத்தில் அம்மா, அப்பா, இன்னும் மற்ற பெரியவர்களின் கண்டிப்பும், கண்காணிப்பும் சந்தோஷத்தைவிட,
சங்கடத்தையே அதிகம் தருவதாக இவர்கள் உணர்கின்றனர்.
சுதந்திரமாய்ச் சுற்றித் திரியும்
குழந்தைக்கும், பெற்றோருக்கும் இருக்கும் உறவுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விவிலியத்தில்
நாம் காணும் உறவு முதல் பெற்றோர் கடவுளுடன் கொண்டிருந்த உறவு. ஆதாம், ஏவாள் இருவரும்
ஏதேனில் இருந்த தோட்டத்தில் நல்லது கேட்டது என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லாமல், கடவுளின்
பிரசன்னத்தில் எப்போதும் வாழ்ந்த அந்த நிலையை தொடக்க நூல் இரண்டாம் பிரிவில் வாசிக்கிறோம்.
குழந்தைகளாய், சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்த இவர்கள் நல்லது கேட்டதை உணர்த்தும் கனியை
உண்டதும், வளர் இளம் பருவத்தினரைப் போல், கடவுளின் குறுக்கீட்டை விரும்பாமல் விலகிச்
சென்றனர். கடவுளோடு கொண்டுள்ள நமது உறவு வளர் இளம்பருவத்தில் இருந்தால், கடவுளின்
இல்லத்தில், கடவுளின் கண்காணிப்பில் வாழ்வது சங்கடமாக இருக்கும். யோபுவின் வாழ்வில் இதற்கு
ஓர் எடுத்துக்காட்டை நாம் காணலாம். யோபு சந்தித்த அடுக்கடுக்கான சோதனைகளை, வேதனைகளை நாம்
அனைவரும் அறிவோம். அவரது நண்பர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்கின்றனர். யோபு
ஒரு குழந்தையைப்போல் தன் இறைவனை அணுக வேண்டும் என்ற நோக்கத்தில், "மனம் தளராதீர், கடவுள்
உம்மைக் கண்காணித்து வருகிறார்." என்று ஆலோசனை தருகின்றனர். வளர் இளம் பருவத்தினர்
போல் யோபு இதற்கு பதில் சொல்கிறார். "கடவுள் கண்காணிக்கிறார்... உண்மைதான். நான் எப்போது
தவறு செய்வேன், என்னைப் பிடிக்கலாம் என்ற நோக்கத்தில் அவர் என்னைக் கண்காணிக்கிறார்."
என்ற எண்ணத்தை யோபு நண்பர்களிடம் சொல்கிறார். 6, 7 ஆகிய இரு பிரிவுகளில் அவர் கூறும்
பதில் உள்ளத்திலிருந்து வெடித்து எழும் வேதனை, கோபம் அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.
பெற்றோர் எப்போதும் தன்னைக் கண்காணிக்கின்றனர் என்பதை உணரும் ஓர் இளைஞன் அல்லது இளம்பெண்
எரிச்சலுடன் பேசும் வார்த்தைகளின் எதிரொலிபோல் ஒலிக்கும் யோபுவின் வார்த்தைகளைக் கேட்போம்:
யோபு 7 : 19 -20 எவ்வளவு காலம் என்மேல் வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்?
என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட என்னை விடமாட்டீரா? மானிடரின் காவலரே! நான் பாவம்
இழைத்துவிட்டேனா? உமக்கு நான் செய்ததென்னவோ? என்னை உம் இலக்காக ஆக்கியதேன்? உமக்கு நான்
சுமையாய்ப் போனதேன்?
குழந்தைப் பருவம், வளர் இளம் பருவம், இளம்பருவம் இவைகளைத்
தாண்டி நாம் முதிர்ச்சி அடையும்போது, Adult to Adult என்ற நிலையில் பெற்றோருடன் உறவு
கொள்கிறோம். ஒரு பக்கம் பெற்றோரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. அதே நேரம், நம் தனிப்பட்ட
சுதந்திரமும் தேவைப்படுகிறது. இந்த இரண்டையும் சரிவரக் கலக்கும் பக்குவத்தை நாம் பெறும்போது,
வாழ்க்கை சுமுகமாய்ச் செல்கிறது. கடவுள் உறவிலும் நாம் முதிர்ச்சி அடையும்போது, கடவுளின்
கண்காணிப்பு, நம் சுதந்திரம் இரண்டும் கலந்த ஓர் உறவை வளர்க்க வேண்டும். இதைத் தான் இறையுறவில்
நாம் கொள்ளவேண்டிய பக்குவம் என்று சென்ற தேடலில் குறிப்பிட்டேன்.
பக்குவப்பட்ட
இந்த Adult to Adult உறவின் உச்சமாக, "ஆண்டவரின் இல்லத்தில் என்றென்றும் வாழ" நாம் அழைக்கப்படுகிறோம்.
பிள்ளைகள் வளர்ந்துவிட்டனர், பொறுப்புடன் வாழ்வர் என்ற நம்பிக்கையில் வீட்டுப் பொறுப்பை
பிள்ளைகளிடம் ஒப்படைப்பதில் பெருமை கொள்ளும் பெற்றோர் போல, இறைவனும் நம்மிடம், "இதோ என்
வீடு... இனி இது உன் வீடு" என்று அவருடன் வாழ விடுக்கும் ஓர் அழைப்பிற்கு திருப்பாடல்
ஆசிரியர் சொல்லும் பக்குவமான பதிலே, “நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது,
என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்” என்ற வார்த்தைகள்.
நன்மை, நேர்மை அனைத்திற்கும்
ஊற்றான இறைவன் ஒவ்வொரு மனிதரோடும் இந்த Adult to Adult - முதிர்ச்சி அடைந்த உறவை வளர்க்க
விரும்புகிறார். இந்த உறவு நிலையை அடைந்தபின், இறைவன் என்னை எப்போதும் பார்த்துக் கொண்டே
இருக்கிறாரே என்ற எண்ணமோ, சங்கடமோ எழாது. ஏனெனில், இறைவனின் இல்லத்தில் அவரைப் போல்,
அவரின் பிம்பமாக என் வாழ்வும் எப்போதும் நேரியதாய், நன்மை நிறைந்ததாய் இருக்கும்.
சரி,
நேர்மையாய், நன்மை நிறைந்த வாழ்க்கை வாழ்வதால் என்ன பயன்? இது நமக்குள் அடிக்கடி எழும்
கேள்வி. அதற்கு திருப்பாடல் ஆசிரியர் கூறும் ஒரே பதில்: “நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்” என்ற வார்த்தைகள். வாழ்வின் ஒரே பயன்,
இறைவனோடு, அவரது இல்லத்தில் என்றென்றும் வாழ்வதுதான். இந்த வாழ்வு தரும் நிறைவை நாம்
அவ்வப்போது உணர்ந்திருக்கிறோம்.
யாரும் நம்மைப் பார்க்கின்றனர், அல்லது பார்க்கவில்லை
என்ற கவலை ஏதும் இல்லாமல், பலன் எதையும் எதிர்பார்க்காமல், நம் மனதில் நல்லதென்று பட்டதை
நாம் செய்திருக்கிறோம். அந்த நேரத்தில் நம் மனதில் உருவாகும் அந்த உயர்ந்த உணர்வு, தூய்மையான
சுதந்திரம் இறைவனின் இல்லத்தில் வாழும் அனுபவத்திற்கு ஈடானது. சொல்லப்போனால், நாம் இறைவனின்
இல்லத்திற்குச் சென்று குடியேறுவதற்கு பதில், இறைவன் நமக்குள் வந்து குடியேறும் நேரங்கள்
இவை. இதுபோன்ற தூய நேரங்கள் வாழ்வில் பெருகுவதையே, திருப்பாடல் ஆசிரியர் “நானும்
ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்” என்ற வார்த்தைகளில்
சொல்லியிருக்கிறார்.