2011-03-29 14:57:01

வட ஆப்ரிக்க வன்முறைகளுக்கு நீதியான தீர்வு காண அப்பகுதி ஆயர்கள் அழைப்பு


மார்ச் 29, 2011. வட ஆப்ரிக்க பகுதியில் இடம்பெறும் வன்முறைகளுக்கு முடிவு காணும் நோக்கில், மனித மாண்பை மதிப்பதுடன் கூடிய நீதியான தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அப்பகுதி ஆயர்கள்.
ஏமன், ஜோர்தான், எகிப்து, லிபியா, மொரோக்கோ, சிரியா மற்றும் பஹ்ரைனின் பதட்ட நிலைகள் குறித்து கூடி விவாதித்த வட ஆப்ரிக்க நாடுகளான மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியாவின் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் என்பது எத்தீர்வையும் கொணராது என்பதை வலியுறுத்தியுள்ளதுடன், வன்முறைகளுக்குப் பலியாகி வரும் மக்கள் குறித்த கவலையையும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பதட்டநிலைகளில் சுதந்திரம், நீதி மற்றும் மாண்புக்கான மக்களின், குறிப்பாக இளைய சமுதாயத்தின் நியாயமான ஏக்கத்தைக் காணமுடிகிறது என ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
போரால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஏழைகளும் வசதிகள் அற்றோருமே எனக்கூறும் வட ஆப்ரிக்க ஆயர்களின் அறிக்கை, அப்பகுதி கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இதுவரைக் கட்டிக்காப்பாற்றிய உறவுகள் இப்பதட்டநிலைகள் மற்றும் போரால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.