2011-03-29 14:56:41

குடும்ப வாழ்வு குறித்த பொகோட்டா கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி.


மார்ச் 29, 2011. நவீன உலகில் குடும்ப வாழ்வு குறித்து கொலம்பியாவின் பொகோட்டாவில் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தலத்திருச்சபைத் தலைவர்கள் கூடி விவாதித்து வரும் கூட்டத்திற்கு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அதிவேகமான கலாச்சார மாற்றங்கள், சமூக நிலையற்ற தன்மை, புலம்பெயர்வு, ஏழ்மை, தவறான கல்வி திட்டங்கள், பொய்யான கொள்கைகள் இவைகளால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவருவது குறித்து திருச்சபை மௌனம் காக்க முடியாது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மனித வாழ்வின் மாண்பைக் காக்கும் மதிப்பீடுகள் மற்றும் விசுவாசம் குறித்து வருங்காலத் தலைமுறையினருக்குப் பெற்றோர் கற்பிப்பதை தூண்ட வேண்டிய திருச்சபையின் கடமையை அதில் வலியுறுத்தியுள்ளார்.
கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வு வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியதற்கான சூழல்களை உருவாக்கித்தர சமூகத்திற்கு இருக்கும் கடமையும் திருத்தந்தையால் வலியுறுத்தப்பட்டுள்ளது அச்செய்தியில்.
குடும்பங்களுக்கான நற்செய்தி அறிவிப்பில் தங்களை ஈடுபடுத்தியுள்ள தலத்திருச்சபைத் தலைவர்கள், தகுந்த முறையில் அதற்கான பயிற்சிகளை பெறவேண்டிய அவசியமும் திருத்தந்தையின் இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் திருச்சபைகளுக்கானச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.