2011-03-29 14:57:16

இலங்கையில் குடிபெயர்ந்து வாழ்வோருள் 52 குடும்பங்களுக்கு வீடு கட்ட மன்னார் மறைமாவட்ட உதவி


மார்ச் 29, 2011. இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முல்லிக்குளம் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுள் 52 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான இடங்களை வழங்கியுள்ளார் மன்னார் ஆயர்.
பாதுகாப்புக் காரணங்களுக்கென இலங்கைக் கடற்படையால் முல்லிக்குளம் கிராமம் ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய 287 குடும்பங்களுக்கு மாற்று இடமாக காயகுளி என்ற வனக்கிராமத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் 125 குடும்பங்களே இந்த மாற்று இடம்பெயர இசைவு அளித்துள்ள நிலையில், 52 தமிழ் கத்தோலிக்க குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கென தன் சொந்த இடத்தைக்கொடுத்து உதவியுள்ளது மன்னார் மறைமாவட்டம்.
காயகுளி என்ற வனக்கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மக்கள் காட்டைத் திருத்தி வீடுகள் கட்டுவதற்கு அரசால் எவ்வித பொருளாதார உதவிகளும் வழங்கப்படவில்லை எனக் கவலையை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முதன்மை குரு விக்டர் சூசை, இதனால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள் மன்னார் ஆயரிடம் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து தற்போது 52 குடும்பங்களுக்கு வீடுகட்டும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இலங்கைக்குள்ளேயே தற்போது குடிபெயர்ந்துள்ள 3 இலட்சத்து 27000 மக்களுள் ஒரு இலட்சத்து 95,000 பேர் தங்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்பியுள்ள போதிலும், அவர்கள் இன்னும் அரசின் உதவிகளுக்கும் பாதுகாப்பிற்கும் காத்திருப்பதாக அறிவிக்கின்றன செய்தி நிறுவனங்கள்.








All the contents on this site are copyrighted ©.