2011-03-28 15:08:53

வாரம் ஓர் அலசல் – வன்மையை மென்மையே வெல்லும்


மார்ச்28,2011. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்த புகழ் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் அறுவைசிகிச்சை செய்வதோடு, மக்களை நேசிப்பதிலும் பலருக்கு நல்லது செய்வதிலும் ஆர்வமுடையவராக இருந்தார். அவர் மருத்துவக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். அவர் வேலை செய்த அந்த மருத்துவமனையில் தினமும் கால் ஊனமான ஒரு சிறுவன் ஒரு மூலையில் நின்று கொண்டு தினத்தாள்களை விற்றுக் கொண்டிருந்தான். இவரும் அவனிடமிருந்து தவறாமல் செய்தித்தாளை வாங்கி வருவார். இந்தச் சிறுவனின் சுறுசுறுப்பையும் புத்திசாலித்தனத்தையும் கண்ட அந்த மருத்துவர் ஒரு நாள் அவனிடம், “ஜானி நான் உனது காலை அறுவைசிகிச்சை செய்து சரி செய்யட்டுமா, அதன்பின்னர் நீ மற்ற சிறுவர்கள் போல ஓடியாடி விளையாடலாம்” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “ரொம்ப நன்றி டாக்டர், ஆனால் அறுவைசிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லையே” என்றான். அப்போது அந்த மருத்துவர் “நீ பணம் தர வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். குறிப்பிட்ட நாளில் அறுவைசிகிச்சை அறைக்கு ஜானி அழைத்துச் செல்லப்பட்டான். மருத்துவர்கள் மயக்கமருந்து கொடுக்க வந்தார்கள். அப்போது அவன், நான் ஒரு சிறிய செபம் சொல்லிக் கொள்கிறேன் என்று அனுமதிக் கேட்டான். பின்னர் அவன் கண்களை மூடி, “கடவுளே, இந்த டாக்டர் ஐயாவுக்கு நீடிய ஆயுளைக் கொடும். அப்பொழுதுதான் அவர் என்னைப் போல் பலருக்கு வாழ்வு கொடுக்க முடியும்” என்று உருக்கமாகச் செபித்தான்.
பின்னர் இந்தச் சிறுவனைப் பற்றிச் சொன்ன அந்த மருத்துவர், “நானும் இதுநாள்வரை எத்தனையோ பேருக்கு அறுவைசிகிச்சை செய்து அவர்களது உயிரைக் காப்பாற்றி இருக்கிறேன். அதற்காகப் பெருமளவானப் பணமும் பெற்றிருக்கிறேன். ஆயினும் இந்தச் சிறுவனுக்கு அறுவைசிகிச்சை செய்த போது கிடைத்த ஆத்ம திருப்தி ஒருபோதும் கிடைத்ததில்லை” என்றார். ஆம். அன்பு நேயர்களே, எந்தவித எதிர்பார்ப்புமின்றிச் செய்யப்படும் ஒரு சிறிய அன்புச் செயலும் சேவையும் பெருந்தொகையான பணத்தைவிட எவ்வளவோ மகத்தானது. அமெரிக்காவில் 2009ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி கொலை செய்யப்பட்ட Emily Rachel Silverstein என்ற 19 வயது கல்லூரி மாணவியும், “நல்லதோர் உலகத்தை உருவாக்க நீ ஹீரோவாக இரு, பரிவன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்” என்று சொல்லியிருக்கிறார். கருணையும் படைப்பாற்றல்திறனும் கொண்ட இவரது பண்புகள் பலரது வாழ்வைத் தொட்டு மாற்றி இருக்கின்றன. அமைதிக்கும் நீதிக்கும் நிலையானஉலகுக்கும் தாகம் கொண்ட செயல்திறன்மிக்கத் தலைவரால் நல்லதோர் உலகை உருவாக்க முடியும் என்று எமிலி நம்பியிருக்கிறார். இந்த எமிலி ஓர் அமைதி விரும்பி. இந்த இளம் பெண்ணின் கனவுகள் நனவாகும், நல்லதோர் உலகம் உருவாகும் என்பதில் எமக்கும் நம்பிக்கை இருக்கிறது.
பரிவன்போடு செய்யப்படும் எந்த ஒரு சிறு செயலும் மாற்றத்தைக் கொண்டு வரும். ஆயினும் இன்று லிபியா உட்பட சில அரபு நாடுகளில் இடம் பெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது இந்தப் பண்புகள் பற்றிக் கேள்வி எழுகின்றது. இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில்கூட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், லிபியாவில் இடம் பெறும் ஆயுதம் தாங்கிய மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு மிக உருக்கமாக விண்ணப்பித்தார். அத்துடன், மத்திய கிழக்குப் பகுதியில் இடம் பெற்ற அண்மை வன்முறைகள் பற்றியும் குறிப்பிட்டு “நீதியையும் சகோதரத்துவ நல்லிணக்க வாழ்வையும்” தேடும் முயற்சியில் “உரையாடல் மற்றும் ஒப்புரவுக்கான” வழிகளைக் கைக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
RealAudioMP3 லிபியாவைக் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் Moammar Ghadafi யை கூட்டு இராணுவப்படைகள் மூலமே ஒடுக்க முடியும் என்ற வியூகம் எழுந்துள்ளது. இது குறித்து முடிவு செய்வதற்கென 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இலண்டனில் இச்செவ்வாயன்று அனைத்துலக மாநாடு ஒன்றைக் கூட்டுகின்றனர். டுனிசியா, எகிப்து ஆகிய நாடுகளையடுத்து சிரியா, ஏமன், பஹ்ரைன் போன்ற நாடுகளிலும் அரசியல் மாற்றங்கள் கேட்டு மக்கள் எழுச்சிகள் இடம் பெற்று வருகின்றன. சிரியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசு வன்முறையைப் பயன்படுத்துவதை ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார். இந்த ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு கடந்த பிப்ரவரி 28 முதல் இந்த மார்ச் 25 வரை ஜெனீவாவில் 16வது அமர்வை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நியுயார்க் டைம்ஸ் தினத்தாளின் முன்னாள் ஈரான் நிருபர் Nazila Fathi, ஈரானில் மனித உரிமைகள் நிலவரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார். ஈரானில் 2010ம் ஆண்டில் 542 பேருக்கும், இவ்வாண்டு சனவரி, பிப்ரவரி மாதங்களில் 150 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவ்வாண்டு முடிவதற்குள் சுமார் ஆயிரம் பேருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்றார்.
"பகைவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வார்கள், போர்களை அறிவிப்பார்கள், ஆனால் நண்பர்கள் தங்களது அன்பை ஒருபொழுதும் விளம்பரப்படுத்தமாட்டார்கள்" என்று Henry David Thoreau சொன்னார். தனது குடிமக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று விளம்பரம் செய்து கொண்டே நல்லவை செய்யாத அரசுகளும் இருக்கின்றன. இந்த ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதியாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றினார். இலங்கை அரசிடம் சரணடைந்த முன்னாள் புலிப்போராளிகளின் புள்ளி விபரத்தை அவர் அறிவித்தார். சரணடைந்த போராளிகளின் எண்ணிக்கை 11,696. இதில் சிறார் படைவீரர் 594. புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டோர் ஏறக்குறைய 5,764. இப்போது அரசிடம் உள்ள முன்னாள் போராளிகள் 4,599 என்றவாறு அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். அப்படியானால் கணக்கில் இல்லாத 739 முன்னாள் புலிப்போராளிகளுக்கு என்ன நடந்தது? அவர்களின் நிலை என்ன? என்பன போன்ற கேள்விகளை ஒரு மனித உரிமைகள் அமைப்பு, ஐ.நா. மற்றும் சர்வதேச சமுதாயத்திடம் முன்வைத்துள்ளது.
இஸ்ரேல் அரசு, 1967ம் ஆண்டிலிருந்து, ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கைது செய்துள்ளது. இவ்வெண்ணிக்கை இஸ்ரேல் ஆக்ரமிப்பின்கீழ் வாழும் மொத்த பாலஸ்தீனியர்களில் இருபது விழுக்காடாகும். பாலஸ்தீனியக் கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்போரின் உரிமைகள் குறித்து இம்மாதம் 11,12 தேதிகளில் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சர்வதேச கருத்தரங்கில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. பல பாலஸ்தீனியப் பெண் கைதிகள் படுக்கைகளில் விலங்குகள் மாட்டப்பட்ட நிலையில் குழந்தைகளைப் பெற்றெடுத்து பின்னர் அக்குழந்தைகளுடன் உடனடியாக அவர்களின் அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். மற்றொரு பெண் கைதி ஏழு ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்த தனது கணவரோடு பேச முயற்சி செய்தார் என்பதால் தனி அறைக்கு அனுப்பப்பட்டார். இப்படி மனித மாண்புக்கு எதிரானப் பல புகார்கள் சொல்லப்பட்டன. தற்சமயம் இஸ்ரேல் சிறைகளில் சுமார் ஏழாயிரம் பாலஸ்தீனியர் வைக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானின் மிகப் பெரிய மாநிலமான பலுசிஸ்தான் கனிவளம் நிறைந்த பகுதியாகும். இங்கு பாகிஸ்தான் செய்து வரும் கொடுமைகளுக்கு எதிராகப் பேசுவதற்கு அரசியல் ஆர்வலர்கள், இளையோர், மாணவர்கள், பெண்கள் என எவருக்கும் உரிமை கிடையாது. அதையும் மீறித் தைரியமாகப் பேசுகிறவர்கள் பாகிஸ்தான் இரகசிய காவல்துறையால் கட்டாயமாகக் கைது செய்யப்படுகிறார்கள். அப்பகுதியில் மக்கள் காணாமற்போதல் பெரும் பிரச்சனையாக இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 1989ம் ஆண்டிலிருந்து எட்டாயிரம் முதல் பத்தாயிரம் பேர்வரைக் காணாமற்போயிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல்கால வன்முறைகள், கொலைகள், இறப்புகள் குறித்துச் சொல்லவே தேவையில்லை. மொத்தத்தில் தெற்கு ஆசியாவில் காணாமற்போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. Human Rights Watch என்ற அமைப்பு, மனித உரிமைகள் நிலவரம் குறித்து 90 நாடுகளில் ஆய்வு செய்து 649 பக்க அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதன் ஆய்வுகளுமே நாடுகளில் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் முன்னேற்றம் இருப்பதாகச் சொல்லவில்லை.
எனினும், கடந்த வாரத்தில் நடந்து முடிந்த ஐ.நா.மனித உரிமைகள் அவை சில நல்ல காரியங்களையும் செய்துள்ளது. உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கும் ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டில் இடம் பெறும் கொலைகள் மற்றும் பிற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குத் தனிப்பட்ட குழு ஒன்றை அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது. பாலஸ்தீனாவில் இஸ்ரேல் குண்டுவெடிப்பில் ஒரு வினாடியில் தனது மகள்களையும் மற்ற உறவுகளையும் இழந்த டாக்டர் Izzedlin Abuelaish என்பவர் சொல்கிறார்–“சிறு பிள்ளைகள், இளையோரின் கனவுகள் கொல்லப்படுகின்றனவே என்று மிகுந்த கோபமடைந்தேன். ஆனால் அன்பு வெறுப்பை வெல்லும் எனப் படிப்படியாக உணர்ந்து இப்போது நான் யாரையும் வெறுக்க மாட்டேன் என்ற உறுதியோடு அன்பைப் பெருக்குவதற்கு முயற்சித்து வருகிறேன்” என்று. இவர் மத்திய கிழக்குப் பகுதிப் பெண்களுக்கென மறுவாழ்வு அமைப்பு ஒன்றை உருவாக்கி நடத்தி வருகிறார். ஐ.நா.வின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
ஆம். இப்படி உலகில் நன்மை செய்பவர்களின் எண்ணிக்கை போதுமான அளவு இல்லாமல் இருப்பதே தீமை தொடர்ந்து ஆட்சி செய்வதற்குக் காரணம்” என்று ஒரு பெரியவர் சொன்னார். அன்பும் கருணையும் கொண்ட இதயங்கள் குறைவுபடுவதே மனித உரிமை மீறல்களும் கொலைகளும் கொள்ளைகளும் அதிகரிக்கக் காரணமாகின்றன. ஆனாலும், இப்படித் துன்பங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனவே என்று, இன்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அது நாளையத் துன்பங்களை அகற்றிவிடாது, மாறாக அது இன்றைய சக்தியை நம்மிலிருந்து அழித்துத் தீர்த்து விடும். எனவே துன்புறும் மக்களின் துயர் துடைக்க தனிமனிதராக என்ன செய்யலாம்?. Emily Rachel Silverstein விரும்பியது போல, சிறு சிறு அன்புச் செயல்களைச் செய்யலாம். பாலஸ்தீன மருத்துவர் Izzedlin Abuelaish போல வெறுப்பை அன்பால் வெல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். வன்மையை மென்மையே வெல்லும் என்பதை உணருவோம்.
அன்னை தெரேசாவும் சொன்னார் நீ மற்றவரைத் தீர்ப்பிட்டால் உனக்கு அவரை அன்பு செய்வதற்கு நேரமே இருக்காது என்று.







All the contents on this site are copyrighted ©.