2011-03-25 11:31:36

மார்ச் 26. வாழ்ந்தவர் வழியில்...........


இன்று உலகெங்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து இலவசமாக அரசுகளாலும் சர்வதேச அமைப்புகளாலும் வழங்கப்படுகிறது. இந்த மருந்து முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 1953 மார்ச் 26. இரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த யூத குடும்பத்தில் 1914ம் ஆண்டு அக்டோபர் 28ந்தேதி பிறந்த ஜோனாஸ் சால்க் என்பவரால் இத்தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இம்மருந்தை இவர் கண்டுபிடித்து முதன் முதலில் சோதனைச் செய்ய முயன்றபோது சிலர் அதற்கு தங்களை உட்படுத்த சுயவிருப்பத்தோடு முன்வந்தனர். அதில் இவரும், இவர் மனைவியும் இவரின் குழந்தைகளும் அடங்குவர். இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்கும் இம்மருந்திற்குக் காப்புரிமை பெறுமாறு பலர் இவரை வற்புறுத்தினர். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் ஜோனாஸ் சால்க். குழந்தைகளின் வாழ்வை சிறுவயதிலேயே பறிக்கும் போலியோ என்ற முடக்குவாத நோய்க்கான தடுப்பு மருந்திற்குக் காப்புரிமை கேட்பது "சூரியனுக்கே காப்புரிமை பெறுவது போன்ற செயல்" என்பது அவரின் வாதமாக இருந்தது. விஞ்ஞானி ஜோனாஸ் சால்க்கின் இந்த இலவச மருந்தால் இன்று எண்ணற்ற குழந்தைகளின் வாழ்வும் நலமும் காப்பாற்றப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு 125 நாடுகளில் 3இலட்சத்து 50 ஆயிரம் பேரை பாதித்திருந்தது இந்நோய். கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி இது 99 விழுக்காடு குறைந்து 1604 ஆகியுள்ளது. உலகில் இன்று ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இந்தியாவில் மட்டுமே இந்நோய் காணப்படுவதாக உலக நலவாழ்வு அமைப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.