2011-03-25 15:35:12

திருத்தந்தை : ஒப்புரவு திருவருட்சாதனம் குருக்களின் விசுவாசத்தையும் தனித்துவத்தையும் வளர்க்கிறது


மார்ச்25,2011. பாவங்கள் மற்றும் ஒப்புரவு திருவருட்சாதனத்திற்குப் பொறுப்பான அப்போஸ்தலிக்கப் பாவமன்னிப்புத் துறை நடத்திய பயிற்சியில் பங்கு கொண்ட சுமார் 800 பேரை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒப்புரவு திருவருட்சாதனத்தின் மேன்மை குறித்து விளக்கினார்.
ஒப்புரவு திருவருட்சாதனம் அதனைப் பெறும் விசுவாசிகளுக்கு மட்டுமன்றி, அதனை வழங்கும் அருட்பணியாளர்களுக்கும் முக்கியமானது என்று கூறிய திருத்தந்தை, இந்த அருட்சாதனத்தின் வழியாக பலரின் மனமாற்றப் புதுமைகளைக் காணும் அருட்பணியாளர்கள், தாங்களும் தங்களது விசுவாசத்தில் ஆழப்படுத்தப்படுகிறார்கள் என்றார்.
ஒப்புரவு திருவருட்சாதனத்தைப் பெறும் விசுவாசிகளின் ஆன்மீக வாழ்வு, அவர்களின் ஆன்மப் பரிசோதனை மற்றும் தங்களது சொந்தப் பாவத்தை ஏற்பதற்கு இருக்கும் தாழ்ச்சி எனும் பண்பிலிருந்து குருக்கள் தங்களுக்குரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றார் திருத்தந்தை.
ஒப்புரவு திருவருட்சாதனத்தை நிறைவேற்றுவதன் மூலம், விசுவாசம் மற்றும் தாழ்ச்சியின் ஆழமானப் பாடங்களைக் குருக்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்றும் குருக்கள் தங்களது தனித்துவம் குறித்து சிந்தித்து பார்க்க அழைக்கப்படுகிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்







All the contents on this site are copyrighted ©.