2011-03-24 14:25:49

ஜப்பான் அணு உலை விபத்தையடுத்து, தென் கொரியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை


மார்ச் 24,2011. ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தை அடுத்து, சுற்றுச் சூழல் ஆர்வலர்களான தென் கொரியாவின் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் இச்செவ்வாயன்று ஒன்று கூடி அரசுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளன.
மனிதரின் அறிவியலுக்கு கிடைத்த ஒரு வெற்றி என்று அணு சக்தியை நாம் அழைப்பதால், மமதை கொண்டு அதில் உள்ள ஆபத்துக்களை புறக்கணித்துள்ளோம் என்றும், ஜப்பான் நமக்கு தகுந்த நேரத்தில் பாடங்களைத் தந்துள்ளதென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது 21 அணு உலைகளை இயக்கி வரும் தென் கொரிய அரசு மேலும் 13 உலைகளைக் கட்ட தீர்மானித்துள்ளது என்பதையும், இன்னும் பிற நாடுகளில் தென் கொரிய அரசு 80 அணு உலைகளை அமைக்க உள்ளது என்பதையும் இவ்வறிக்கைச் சுட்டிக்காட்டி, இந்த முடிவுகளை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் 1979ம் ஆண்டு அணுக்கதிர் வீச்சு விபத்து நிகழ்ந்த மார்ச் 28ம் தேதி முதல், இரஷ்யாவின் செர்னோபிலில் 1986ம் ஆண்டு விபத்து நிகழ்ந்த ஏப்ரல் 26ம் தேதி வரை அணு சக்திக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து நடத்த இருப்பதாக தென் கொரியாவின் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் அறிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.