2011-03-24 14:27:46

இந்தியாவில் காடுகள் சார்ந்த சட்டம் நீக்கப்பட்டிருப்பதற்கு கத்தோலிக்கர் வரவேற்பு


மார்ச் 24,2011. இந்தியாவில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ள காடுகள் சார்ந்த ஒரு சட்டத்தை மத்திய அரசு நீக்கியிருப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபையினரும், சமுதாய ஆர்வலர்களும் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.
அரசின் உத்தரவின்றி காட்டுக்குள் செல்லும் பழங்குடியினரைக் கைது செய்தல், காட்டுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்துவதற்கு தண்டனை விதித்தல் ஆகியவை அடங்கிய சட்டம் ஒன்றை அரசு இப்புதனன்று நீக்கியுள்ளது.
இந்தியா விடுதலை அடைவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன், 1927ல் இயற்றப்பட்ட காடுகள் தொடர்பான சட்டங்கள் மிகப் பழைமையானவை. இச்சட்டங்களால் அதிகம் பாதிக்கப்படுவது காடுகளை நம்பி வாழும் பழங்குடியினரே. இந்த நிலையை அரசே உணர்ந்து, இப்புதனன்று இச்சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது என்று UCAN செய்தியொன்று கூறுகிறது.
காடுகளையே நம்பி வாழும் பழங்குடியினர் இந்தச் சட்ட மாற்றத்தால் பெரிதும் பயனடைவர், அவர்களது அன்றாடத் தேவைகளாவது பயமின்றி தீர்க்கப்படும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பழங்குடியினருக்கான பணிக் குழுவின் செயலர் அருள்தந்தை ஸ்தனிஸ்லாஸ் திர்கி கூறினார்.
காடுகளின் உரிமையாளர்களான பழங்குடியினரைப் பல வழிகளிலும் அச்சுறுத்தி வந்த இந்த அர்த்தமற்ற, மிகப் பழமையான சட்டங்களை அரசு நீக்கியுள்ளது பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள நீதி என்று பழங்குடியினர் சார்பில் பத்திரிக்கைகளில் எழுதி வந்த முக்தி பிரகாஷ் திர்கி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.