2011-03-23 15:52:42

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


மார்ச்23,2011. மார்ச் 21 வசந்த காலத்தின் ஆரம்ப நாள். இந்தக் காலத்தின் அறிகுறியை இப்புதனன்று உரோமையில் நன்றாக அனுபவிக்க முடிந்தது. கடந்த பல மாதங்களாக வத்திக்கானிலுள்ள பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புதன் பொது மறைபோதகம் இந்தப் பருவகாலத்தால் இப்புதனன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்குத் தொடங்கிய இம்மறைபோதகத்தில் புனித பிரிண்டிசி இலாரன்ஸ் பற்றி எடுத்துச் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
RealAudioMP3
கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்த புனித பிரிண்டிசி இலாரன்ஸ் ஆன்மாக்களின் மீட்புப் பணிக்காக ஆர்வமுடன் உழைத்தது, அவரது பரந்துபட்ட கல்வியறிவு, வாய்ச்சாலமானப் போதனை ஆகியவற்றிற்காக 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டு தொடக்கக் காலங்களில் அவர் பிரபலமானவராக விளங்கினார். விசுவாசம் பற்றிய பல கட்டுரைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட அந்தக் காலக் கட்டத்தில் புனித இலாரன்ஸ், தனது ஆழமான நுண்ணறிவைப் பயன்படுத்தி திருச்சபைப் போதனைகளின் விவிலிய மற்றும் திருச்சபைத் தந்தையரின் ஆதாரங்கள் குறித்தத் தெளிவை ஏற்படுத்தினார். பிரான்சிஸ்கன் மரபில் வளர்ந்த இவர், நாடுகள் மற்றும் ஐரோப்பிய மக்களுக்கிடையே அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு முழுமூச்சுடன் தன்னை உட்படுத்தினார். வன்முறையாலும் அறநெறியில் தெளிவற்ற நிலையாலும் சமயப் புறக்கணிப்பாலும் நிறைந்துள்ள இன்றைய நமது உலகுக்கு இவரின் சான்று வாழ்வு மிக நேர்த்தியான எடுத்துக்காட்டாய் அமைகின்றது. நன்கு தயாரிக்கப்பட்ட, ஆர்வமும் தைரியமும் நிறைந்த, புனித பிரிண்டிசி இலாரன்ஸ் போன்ற திருத்தூதர்கள் புதிய நற்செய்திப் பணிக்குத் தேவைப்படுகிறார்கள். இதன்மூலம் நற்செய்தியின் ஒளியும் அழகும் ஒவ்வொரு மனித இதயத்தின் அடிநாளத்தைச் சென்றடைய முடியும். அன்பு நண்பர்களே, திருமறை நூல்களை வாசிப்பதன் மூலமும் அன்றாடத் தனிச் செபத்தில் இயேசு கிறிஸ்துவோடு அன்புறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமும் நம் ஆண்டவர் நம்மில் வளர புனித பிரிண்டிசி இலாரன்ஸ் உதவுவார். ஏனெனில் நமது ஒவ்வொரு நற்செயலும் இயேசுவில் துவக்கத்தையும் முடிவையும் கொண்டுள்ளது.
RealAudioMP3 இவ்வாறு தனது புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பயணிகளை வாழ்த்தித் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.