2011-03-22 16:03:22

மார்ச் 23, வாழந்தவர் வழியில்...


ஜி.டி.நாயுடு என்று பொதுவாக அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் 1893ம் ஆண்டு மார்ச் 23ம் நாள் பிறந்தார். ஜி.டி.நாயுடு தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.
பல்கலைக்கழகப் பட்டம் எதுவும் பெறவில்லையெனினும், அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல. புகைப்படத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் பல உள்ளன.
ஜி.டி.நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவில்லை. தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் இந்திய நாட்டிற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றைத் தன் பெயரில் பதிவு செய்யவில்லை என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விடுத்தார்.
விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை எவ்வகையிலும் உற்சாகப்படுத்தவில்லை.
தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தன்னுடைய சுயமுயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.
ஜி.டி.நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றைப் பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர். ‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.
‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் மாபெரும் கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.'கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை போன்ற மனிதருடன் வாழ்வது நமக்குத்தான் பெருமை’ என்று மனம் திறந்து பாராட்டினார் இயற்பியல் துறைக்கான நொபெல் பரிசைப் பெற்ற சர்.சி.வி. ராமன்.







All the contents on this site are copyrighted ©.