2011-03-22 15:27:48

பாலியல் உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் அடிப்படையில் மக்கள் தாக்கப்படுவதற்குத் திருப்பீடம் கண்டனம்


மார்ச்22,2011. எல்லா மனிதரின் தவிர்க்க இயலாத மாண்பும் மதிப்பும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளை, பாலியல் உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் அடிப்படையில் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படும் அனைத்து வன்முறைகளையும் திருப்பீடம் வன்மையாய்க் கண்டிக்கிறது என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 16வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு உரைத்தார்.
பாலியல் கண்ணோட்டம் என்ற வார்த்தையின் பொருள் குறித்து தேவையற்ற சில குளறுபடிகள் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பாலியல் உணர்வுகளுக்கும் பாலியல் எண்ணங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு இருப்பதை விளக்கினார்.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் வாழ்க்கை முழுவதும் முழுமையாக அர்ப்பணிக்கும் திருமணத்தில் உண்மையாகவே வெளிப்படுத்தப்படும் மனிதப் பாலியல் நடவடிக்கை ஒரு கொடை என்பதில் திருப்பீடம் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் பேராயர் ஐ.நா.கூட்டத்தில் தெரிவித்தார்.
பாலியல் நடவடிக்கையின் அறநெறித்தன்மையைப் புறக்கணிப்பது மனித சுதந்திரத்தைப் புறக்கணிப்பதாகும் என்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்காதவர்களைத் தாக்கும் போக்கு காணப்படுகின்றது என்றும் இந்தத் தாக்குதல்கள் மனித உரிமைகள் அவையின் தீர்மானங்களில் அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக அமைகின்றன என்றும் பேராயர் குறை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.