2011-03-22 15:29:29

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் பற்றிய Facebook பக்கம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது.


மார்ச் 22, 2011. திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலைக் குறித்து வத்திக்கான் வானொலியும் வத்திக்கான் தொலைக்காட்சி மையமும் நடத்தி வரும் இணையதளத்தின் Facebook பக்கம் (www.facebook.com/vatican.johnpaul2), பெருமளவில் வெற்றி பெற்று வருவதாக இவ்விரு வத்திக்கான் அமைப்புகளின் தலைவர் குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இந்த Facebook பக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே 30 ஆயிரம் விசிறிகளை இது கொண்டுள்ளதாகவும், இத்தாலியம் முதல் சைன மொழி வரையில் பல ஆயிரக்கணக்கான ஆதரவுக் கருத்துக்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்த இயேசு சபை குரு லொம்பார்தி, இப்பக்கம் ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் என்ற விகிதத்தில் மக்கள் பார்வையிட்டதாகவும், அதில் வெளியிட்டுள்ள செய்திகள் இதுவரை 20 இலட்சம் தடவைகளுக்கு மேல் திறந்து வாசிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்களை எடுத்துரைத்தார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலுக்கு வரும் மே மாதம் ஒன்றாந்தேதி முத்திப்பேறு பட்டம் வழங்கப்பட உள்ளதையொட்டி அதற்கெனத் திறக்கப்பட்டுள்ள Facebook மற்றும் YouTube பக்கத்தில்(www.youtube.com/giovannipaoloii) அத்திருந்தையின் 27 ஆண்டு பாப்பிறை பதவிக் காலத்தின் ஒலி-ஒளி காட்சிகள், திருப்பயணப் படங்கள், வெவ்வேறு மொழிகளில் அவர் பேசியவை போன்றவை மக்களின் பார்வைக்கெனத் தரப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.