2011-03-22 15:38:17

ஜப்பான் : குடிநீர், பால், கீரைகளில் அணுநச்சு


மார்ச் 21,2011 ஜப்பானின் புக்குஷிமாவைச் சுற்றியுள்ள நான்கு மாகாணங்களில் இருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புக்குஷிமா, இபாராக்கி, டோச்சிகி மற்றும் குன்மா ஆகிய மாகாணங்களில் இருந்து கீரை ஏற்றுமதியும், புக்குஷிமாவில் இருந்து பால் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த இருநாட்களில், இவற்றில் அளவுக்கு அதிகமாக கதிர்வீச்சின் பாதிப்பு இருந்ததால், ஜப்பான் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், தற்போது மூன்று உலைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. எனினும் மின்சாரம் மூலம் உலை குளிரூட்டும் முறை துவக்கப்படவில்லை. அதனால், தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் நீர் ஊற்றப்பட்டு உலைகள் குளிரூட்டப்படுகின்றன. இதன் காரணமாக, கதிர்வீச்சு கசிவு கணிசமான அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் இத்திங்களன்று 3ம் உலையில் இருந்து, திடீரென சாம்பல் நிறத்தில் புகை வெளிப்பட ஆரம்பித்தது. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் தற்காலிமாக வெளியேற்றப்பட்டனர்.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், 10 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு ஜப்பானில் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஐந்தாண்டு காலம் ஆகும் என்றும் உலக வங்கி கணக்கிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.