2011-03-22 15:33:23

'கருவில் உருவாகியும் பிறப்பைக் காணாத குழந்தைகள்' தினத்தை இவ்வெள்ளியன்று சிறப்பிக்கிறது அர்ஜென்டினா தலத்திருச்சபை.


மார்ச் 22, 2011. 'கருவில் உருவாகியும் பிறப்பைக் காணாத குழந்தைகள்' தினத்தை இவ்வெள்ளியன்று சிறப்பிக்கும் அர்ஜென்டினா தலத்திருச்சபை, வாழ்வுக்கான ஜெபமாலை என்பதில் அனைத்து விசுவாசிகளும் பங்குபெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
கருக்கலைப்பு தொடர்புடைய ஒழுக்க ரீதி மற்றும் சட்ட ரீதி குற்ற நிலை குறித்து ஆழ்ந்து சிந்திக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கும் இத்தினத்தின்போது Buenos Aires பேராலயத்தில் ஜெபமாலையை மக்களுடன் இணைந்து ஜெபிப்பார் கர்தினால் ஹோர்ஜே பெர்கோலியோ.
திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்றான கருக்கலைப்பை எதிர்ப்பதற்கான ஒரு பொதுவான வழிமுறையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தலத்திருச்சபை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
2011ம் ஆண்டை வாழ்வுக்கான ஆண்டு என அறிவித்துள்ள அர்ஜென்டினா தலத்திருச்சபை, கருவில் வளரும் குழந்தைகளுக்கானப் பாதுகாப்பு, கருக்கலைப்பைச் சட்டரீதியாக்குவதற்கு எதிர்ப்பு, கருத்தாங்கியுள்ள பெண்களுக்கானப் பாதுகாப்பை ஊக்குவித்தல், ஏழ்மையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி போன்றவைகளைத் திட்டமிட்டு அறிவித்துள்ளது.
கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அர்ஜென்டினாவில் 1998ம் ஆண்டு முதல்க் மார்ச் 25ந்தேதி 'கருவில் உருவாகியும் பிறப்பைக் காணாத குழந்தைகள்' தினமாக சிறப்பிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.