2011-03-21 15:10:03

திருத்தந்தையின் மூவேளை செப உரை.


மார்ச் 21, 2011. நமக்கென இருக்கும் ஒரே உறைவிடம் கிறிஸ்துவே என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளுடன் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்து உருமாறியது பற்றிய இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்த தன் கருத்துகளை நண்பகல் மூவேளை செப உரையின்போது குறிப்பிட்ட பாப்பிறை, இந்நிகழ்வு இயேசுவில் எவ்வித மாற்றத்தையும் கொணரவில்லை எனினும், அவரின் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது என்றார்.
புனிதர்கள் பேதுரு, யாகப்பர் மற்றும் யோவானுக்குக் கிட்டிய இயற்கைக்கு மேம்பட்ட கொடையான இந்தக் காட்சியைக் காணும் பேற்றை, நாமும் செபம் மற்றும் இறைவார்த்தைக்கு செவிமடுத்தல் மூலம் பெறமுடியும் என மேலும் கூறினார் அவர்.
லிபியாவில் காணப்படும் அண்மை பதட்டநிலைகள் குறித்தும் இம்மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை, லிபியாவின் இன்றைய நிலைகள் தன்னில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளதாக எடுத்துரைத்தார்.
தன் கடந்த வார வருடாந்திர தியானத்தின்போது லிபியாவின் அமைதிக்காக செபித்ததாக உரைத்த பாப்பிறை, அப்பாவி பொது மக்களின் பாதுகாப்பை மனதிற்கொண்டு அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.