2011-03-21 15:19:35

அணு உலைகளின் ஆபத்துக்கள் குறித்த கேள்விகளை புறந்தள்ள முடியாது என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்


மார்ச் 21, 2011. மனித குலத்திற்கான பெரும் சக்தி ஆதாரமாக அணுசக்தி இருக்கின்றது என்பது உண்மை எனினும், அதனால் இடம்பெற உள்ள ஆபத்துக்கள் குறித்த கேள்விகளை நாம் புறக்கணிக்கமுடியாது என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
வாரந்தோறும் தொலைக்காட்சியில் தான் வழங்கும் 'ஒக்தாவா தியேஸ்' என்ற நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்ட திருப்பீடப் பேச்சாளர், ஜப்பானின் சுனாமி இயற்கைப் பேரிடரின் பாதிப்புகள் குறித்து வரும் செய்திகள் மனிதர்களைக் கவலைக்குள்ளாக்குவதோடு, அணுசக்தி குறித்த கேள்வியையும் நம்மில் எழுப்புகின்றன என்றார். முதலில் ஆழிப்பேரலைகளினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்துக் கவலைப்பட்ட மனித குலம் தற்போது அணுவுலை வெடிப்புகளின் பாதிப்புகள் குறித்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்றார்.
மனித சமுதாயத்திற்கான பெரும் சக்தி ஆதாரமாக அணுசக்தி உள்ளது எனினும், கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு, கதிர்வீச்சால் ஏற்படும் ஆபத்து, அணுசக்திக்கு மனிதன் கொடுக்க வேண்டிய விலை ஆகியவைகள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என மேலும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.