2011-03-19 14:45:34

மார்ச் 19. வாழ்ந்தவர் வழியில்...........


திருச்சபையில் புனித யோசேப்பின் விழா இருவேறு தினங்களில் சிறப்பிக்கப்படுகிறது. மே மாதம் முதல் தேதி தொழிலாளர்களின் பாதுகாவலராக சிறப்பிக்கப்படும் புனித யோசேப்பு, மார்ச் 19ம் தேதி அன்னை மரியின் மணவாளனாக, திருக்குடும்பத் தலைவனாக, இயேசுவின் இவ்வுலகத்தந்தையாகச் சிறப்பிக்கப்படுகிறார். இதையொட்டியே, இத்தாலி, இஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற பாரம்பரிய கத்தோலிக்க நாடுகளில் தந்தையர் தினமானது, புனித யோசேப்பின் விழாவோடு இணைந்து சிறப்பிக்கப்படுகின்றது.
தந்தையர் தினம் என்பது தந்தையர்களைக் கெளரவிப்பதற்காகக் கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அன்னையர்களைக் கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது எனலாம்.
வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவரின் முயற்சியால் 1910ம் ஆண்டு ஜூன் 19 முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.
தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கியவர் அவ்வை மூதாட்டி.
எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்களை நோக்கி கொஞ்சம் சிந்தனைகளை ஓடவிட்டுப் பார்ப்போம். வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் நம்மை ஆளாக்க பட்ட துயரங்கள் கொஞ்சமாவது நம் கண்களைக் கலங்கவைக்கும்.
கண்களின் இந்த வெளிப்பாட்டிற்கு நம் ஆக்கபூர்வமான கைமாறு என்ன?
வள்ளுவப்பெருந்தகை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெகு நேர்த்தியாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை
என் நோற்றான்கொல்" எனும் சொல்!








All the contents on this site are copyrighted ©.