2011-03-19 14:51:04

தண்ணீர்த் தட்டுபாட்டைச் சமாளிக்க வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – ஐ.நா.


மார்ச்19,2011. 2025ம் ஆண்டுக்குள் சுமார் 180 கோடிப் பேர் தண்ணீர்ப் பஞ்சத்தையும், உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும் எதிர்நோக்குவார்கள் என்ற நிலையில் ஏழை மக்களுக்குச் சுத்தமானத் தண்ணீர் கிடைப்பதற்கு நாடுகள் காடுகளைப் பாதுகாக்குமாறு ஐ.நா. ஆதரவு பெற்ற ஒரு கூட்டத்தில் கூறப்பட்டது.
எந்த ஒரு நாட்டின் இயற்கை உள்கட்டமைப்புக்கும் காடுகள் ஓர் அங்கமாக இருக்கின்றன என்றும், இவை தண்ணீர் சுழற்சிக்கு இன்றியமையாதவை என்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் வனப்பாதுகாப்புத் துறையின் உதவி இயக்குனர் Eduardo Rojas-Briales கூறினார்.
உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய Rojas, நியுயார்க், சிங்கப்பூர், ஜகார்த்தா, ரியோ தெ ஜனியெரோ, பொகாட்டா, மத்ரித், கேப்டவுண், போன்ற உலகின் மாநகரங்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதி காடுகளிலிருந்து குறிப்பிடத்தகும் அளவில் குடிநீரை எடுக்கின்றன என்றார்.
ஐ.நா.பொது அவை, 2011ம் ஆண்டை சர்வதேச காடுகள் ஆண்டு என அறிவி்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.