2011-03-18 15:52:32

வத்திக்கான் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் சந்திப்பு


மார்ச்18,2011. ஐரோப்பாவில் பாரம்பரியக் கிறிஸ்தவ விழுமியங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் பன்னாட்டு அமைப்புகளுடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch இரஷ்யாவுக்கு மேற்கொண்ட முதல் சுற்றுப்பயணத்தில் இப்புதன்கிழமை மாஸ்கோவிலுள்ள இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவர் Kirill ஐச் சந்தித்து ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் நிலை குறித்து கலந்து பேசினார்.
இச்சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவர் அலுவலகம், கத்தோலிக்க மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையேயான சர்வதேச உரையாடல் குழு நடத்தும் கலந்துரையாடல்கள் குறித்து இச்சந்திப்பில் இடம் பெற்றதாகக் கூறியது.
இவ்விரு சபைகளுக்கிடையே இறையியல் கருத்துக்களில் வேறுபாடுகள் இருப்பினும், ஐரோப்பாவில் சமூக, பொருளாதாரத் துறைகளிலும், அறிவியல் ஆராய்ச்சிகளின் அறநெறிக் கூறுகளிலும் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு குறித்து வலியுறுத்துவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஐரோப்பிய சமுதாய அவை போன்ற பன்னாட்டு அமைப்புகளுடன் கிறிஸ்தவ சபைகள் தங்களது ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று இச்சந்திப்பில் கூறப்பட்டதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.