2011-03-17 15:58:22

சீன அரசு புதிய அணுசக்தி நிலையங்கள் கட்டுவதற்கு தடை


மார்ச் 17,2011. ஜப்பானில் எழுந்துள்ள அணுக்கதிர் வீச்சு அபாயங்களுக்குப் பின், சீன அரசு புதிய அணுசக்தி நிலையங்கள் கட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
தற்போதைய நிலையில் சீனாவில் உள்ள 13 அணுசக்தி நிலையங்களில் இருந்து அந்நாட்டிற்கு 2 விழுக்காடு மின்சக்தி கிடைத்து வருகிறது. இந்த நிலையை விரைவில் மாற்றும் ஓர் எண்ணத்துடன், தற்போது 27 அணு சக்தி நிலையங்களை சீன அரசு தற்போது கட்டி வருகிறது. அதாவது, உலகில் தற்போது கட்டப்பட்டு வரும் அணுசக்தி நிலையங்களில் 40 விழுக்காட்டு நிலையங்கள் சீனாவில் கட்டப்படுகின்றன.
உலக அணுசக்திக் கழகத்தின் அறிக்கையின்படி, அடுத்த சில ஆண்டுகளில் சீனா 110 அணுசக்தி நிலையங்களைக் கட்டுவதற்குத் திட்டமிட்டிருந்தது.
தற்போது ஜப்பான் சந்தித்துள்ள அணுக்கதிர் வீச்சு ஆபத்தைக் கண்ட சீன அரசு, புதிதாக எந்த அணுசக்தி நிலையங்களையும் அமைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளது. அத்துடன், தற்போது இயங்கி வரும் நிலையங்களிலும், கட்டப்பட்டு வரும் நிலையங்களிலும் பாதுகாப்பு பரிசீலனைகளை மிகவும் கடினமாக்கியுள்ளதென்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக்கதிர் வீச்சு அபாயம் சீனாவில் நிகழ்ந்தால் மிக அதிகமான உயிர்பலிகள் நிகழும்; ஏனெனில், இந்நிலையங்கள் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டு வருகின்றன, மற்றும் சீனாவின் மக்கள் தொகை ஜப்பானின் மக்கள் தொகையை விட மிக அதிகம் என்று அணுசக்தி குறித்து ஆய்வுகள் செய்யும் Yang Fuquiang என்ற அறிவியலாளர் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.