2011-03-17 15:54:13

குடியேற்றதார்கள் இவ்வுலகில் மேற்கொண்டுள்ள பயணத்தில் அவர்களுடன் பயணிப்பது நம் கடமை - வத்திக்கான் அதிகாரி


மார்ச் 17,2011. நாடு விட்டு நாடு சென்று பணி செய்யும் மக்கள் மத்தியில் திருச்சபை மேற்கொள்ளும் பணிகள் இவ்வுலகிற்கு மிகவும் தேவையான ஒரு பணி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
பல்வேறு கத்தோலிக்கக் கழகங்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் இவ்வெள்ளியன்று யோர்தான் நாட்டின் Amman நகரில் நடைபெற உள்ளது. திருப்பீட குடியேற்றதாரர் மேய்ப்புப் பணி அவையின் தலைவரான பேராயர் Antonio Maria Veglio அக்கூட்டத்தில் ஆற்றவிருக்கும் உரையில் இக்கருத்துக்களைப் பகிர்வார் என்று வத்திக்கான் செய்தியொன்று கூறுகிறது.
குடியேற்றதார்கள் இவ்வுலகில் மேற்கொண்டுள்ள பயணத்தில் அவர்களுடன் பயணிப்பதும், அவர்களைக் கத்தோலிக்க விசுவாசத்தில் முதிர்ச்சியடையச் செய்வதும் கத்தோலிக்கக் கழகங்களின் தலையாயப் பணி என்று பேராயர் கூறியுள்ளார்.
தனி மனிதர்களின் மதிப்பு என்பது திருச்சபையின் மையப் படிப்பினைகளில் ஒன்று எனவே, அந்த மதிப்பை ஒவ்வொரு குடியேற்றதாரரும் உணர்வதற்கு திருச்சபை தன் மெய்ப்புப் பணிகளில் தனி கவனம் செலுத்த வேண்டுமென்று பேராயர் Veglio கோரியுள்ளார்.
மனித மதிப்பை வளர்ப்பதில் ஒவ்வொருவரின் தனி மனித சுதந்திரமும் அடங்கும், அந்தச் சுதந்திரங்களில் மிக அடிப்படையான சுதந்திரம் மத, மற்றும் கலாச்சாரச் சுதந்திரம் என்றும் பேராயர் தன் உரையில் வலியுறுத்த உள்ளார்.








All the contents on this site are copyrighted ©.