2011-03-16 16:13:47

பிரித்தானிய அரசின் பிறநாட்டுக் கொள்கைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவை - கர்தினால் Keith O'Brien


மார்ச் 16,2011. பிரித்தானிய அரசின் பிறநாட்டுக் கொள்கைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொள்கைகளாக உள்ளன என்று அந்நாட்டின் கர்தினால் Keith O'Brien கூறினார்.
பிரித்தானிய அரசு அண்மையில் பாகிஸ்தானுக்கு 44 கோடியே 50 லட்சம் பவுண்டுகள் நிதி உதவி ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் O'Brien மதச் சுதந்திரம் பல்வேறு வழிகளில் பறிக்கப்படும் அந்நாட்டில் மதச் சுதந்திரம் உறுதி செய்யப்படாமல் அளிக்கப்படும் உதவிகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உலகின் பல நாடுகளிலும் மத அடிப்படையில் எழும் வன்முறைகளுக்கு கிறிஸ்தவர்களே பெரும்பாலும் ஆளாகின்றனர் என்பதைக் குறிக்கும் ஒரு கருத்துக் கணிப்பு Aid to the Church in Need என்ற அமைப்பு இச்செவ்வாயன்று வெளியிட்டிருந்தது.
இக்கருத்துக் கணிப்பின்படி, உலகின் பல பகுதிகளில் 11 கோடியே பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. மத வன்முறைகளுக்கு ஆளாகும் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களே என்றும் இக்கணிப்பு கூறுகிறது.இவ்வறிக்கையைக் குறித்துப் பேசிய கர்தினால் O'Brien பாகிஸ்தான், மற்றும் பிற அரபு நாடுகளில் மத சுதந்திரம் வெகுவாக குலைந்துள்ளதென்றும் இதனால் அடிப்படை மனித உரிமைகளும் அங்கு அழிந்து வருகிறதென்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.