2011-03-14 15:41:36

வாரம் ஓர் அலசல் – "கடல்தாயே எம்மைக் காப்பாற்று!"


மார்ச் 14,,2011. RealAudioMP3 ஏ கடலே!, உன் கரையில் இதுவரை கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம், இப்போது பிணங்களைப் பொறுக்குகிறோமே. ஏ! கடலே! நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா அல்லது முதுமக்கள் தாழியா? உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை! உன் மீன்களை நாங்கள் கூறுகட்டியதற்காகவா எங்கள் பிணங்களை நீ கூறு கட்டுகிறாய்? அடக்கம் செய்ய ஆளிராதென்றாப் புதை மணலுக்குள் புதைத்து விட்டே போய்விட்டாய்! பிணங்களை அடையாளம் காட்டப் பெற்றவளைத் தேடினோம், ஆனால் அவள் பிணத்தையே காணோம்! கடலே, மரணத்தின்மீதே மரியாதை போய்விட்டது. பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு, மரணம் தனியே வந்தால் அழகு, மொத்தமாய் வரும் மரணத்தின்மீது சுத்தமாய் மரியாதை இல்லை. இயற்கையின் சவாலில் அழிவுண்டால் விலங்கு. இயற்கையின் சவாலை எதிர் கொண்டால் மனிதன்!
அன்பு இதயங்களே, 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப்பேரலை சீறி வந்து சிறியவர் பெரியவர், ஏழை பணக்காரர் என்ற பாரபட்சமின்றி இலட்சக்கணக்கான உயிர்களை அள்ளிக் கொண்டு போனது. அச்சமயம் கவிப்பேரரசர் வைரமுத்து எழுதிய இந்தக் கவிதை வரிகளைப் போல எத்தனையோ உள்ளங்கள் தங்கள் ஆற்றாமையைக் கவிதைகளாக வடித்து மனதின் பாரத்தை இறக்கி வைக்க முயற்சித்தன. இந்த 2004ம் ஆண்டு அனுபவத்திற்குப் பின்னர் சுனாமி என்ற வார்த்தையைக் கேட்டாலே நம்மில் ஒருவித கலக்கம் ஏற்படுகின்றது. இப்பொழுது ஜப்பானை நடுங்க வைத்துள்ள இந்தச் சுனாமியால் பல நாடுகள் நெருப்பை மடியில் சுமந்த வண்ணம் இருக்கின்றன.
சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியிலிருந்தே பிறந்தது. tsu என்றால் துறைமுகம். ("harbor"). nami என்றால் அலை ("wave"). தொடர் தண்ணீர் அலைகள் என்று இதற்கு அர்த்தம். பசிபிக் பெருங்கடலில் 6,852 தீவுக்கூட்டங்களைக் கொண்ட கிழக்கு ஆசிய நாடான இந்த ஜப்பான் சுனாமிகளை அடிக்கடி எதிர்நோக்கும் நாடு. இதுவரை சுமார் 195 சுனாமி நிகழ்வுகள் இடம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி வெள்ளிக்கிழமை வடகிழக்கு ஜப்பானின் Miyagi பகுதியைத் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம், அதைத் தொடர்ந்தச் சுனாமிப் பேரலைகள், அதைத் தொடர்ந்து இடம் பெற்ற நிலஅதிர்வுகள், அதனால் சனிக்கிழமை ஏற்பட்ட அணுமின் நிலையம் ஒன்றின் அணுஉலை1,ன் வெடிப்பு, இதனால் நாடு முழுவதும் அணுக்கதிர்வீச்சு பரவும் அபாயம் எனத் தற்போது அந்நாடு எதிர்நோக்கும் பேரிழப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கடந்த 65 ஆண்டுகளில் எதிர்நோக்கும் கடும் துயரம் என்று ஜப்பான் பிரதமர் Naoto Kan கூறியிருக்கிறார்.
12 கோடியே 70 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டு உலகில் மக்கள் தொகையில் பத்தாவது இடத்தில் இருக்கும் நாடு ஜப்பான். இந்த நாடு உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல்களால் இரண்டாம் உலகப் போரில் கடுமையாய்த் தாக்கப்பட்டு அதன் பின்னர் கடும் உழைப்பினால் முன்னேறியது எல்லாருக்கும் தெரியும். இப்பொழுதும் ஜப்பான் பிரதமர் கான், இந்த நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டு வருவது என்பது நம் ஒவ்வொருவரையும் பொருத்தது. நாம் ஒன்று சேர்ந்து செயல்பட்டு விரைவில் இந்த கடும் நெருக்கடியை மேற்கொள்வோம் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மக்களுக்குச் சொல்லி வருகிறார். இந்த ஜப்பானியரின் உறுதிப்பாட்டை அவர்கள் ஈடுபட்டு வரும் நிவாரணப் பணிகளில் காண முடிகின்றது. ஒரு இலட்சம் படைவீரர்களும் மீட்புப் பணிகளில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மின்தடை கடுமையாய் இருக்கும் என்று பிரதமர் Kan தொலைக்காட்சியில் எச்சரித்திருக்கிறார். மின்கதிர் வீச்சு அபாயத்தால் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து பத்தாயிரம் பேர் இல்லிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுத் அவசரகாலக் குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொடர் இயற்கைப் பேரிடர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.
தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலுள்ள முதல் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளியானது. அணுஉலைக்குச் சென்றுகொண்டிருந்த மின்சப்ளை நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் குளிர்விப்பான்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அணுஉலையைச் சுற்றி அழுத்தம் அதிகரித்து அந்த அணுஉலை வெடித்துச் சிதறியது. இந்நாட்டிலுள்ள அணுஉலைகள் அனைத்தும் நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இப்போது ஏற்பட்டுள்ள 8.9 ரிக்டர் அளவு பயங்கரமான நிலநடுக்கத்தால் 10 அணு உலைகளை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. ஃபுக்குஷிமாவிலிருந்து கசியும் கதிரியக்கம், ‘சட்டப்படியான அதன் பாதுகாப்பு அளவையும்’ கடந்து ஒரு கட்டத்தில் வெளியேறியதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மின் நிலையத்திலுள்ள அணு உலையொன்றின் மையப்பகுதியில் அதிகரித்துள்ள வெப்பத்தை கடல் நீரைக்கொண்டு தணிக்க அதிகாரிகள் முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை. புளூட்டோனியமும் யூரேனியமும் கொண்டுள்ள மூன்றாம் இலக்க உலை இத்திங்களன்று வெடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கும் மீட்புப் பணிகளைச் செய்து வருவோருக்கும் தனது செபம் நிறைந்த ஆறுதலைத் தெரிவித்தார்.
RealAudioMP3
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இடர்துடைப்பு அமைப்பு உட்பட பல உலக நாடுகளும் ஜப்பானுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்திய நாடாளுமன்றம் இத்திங்களன்று ஜப்பானுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்து மௌன அஞ்சலியும் செலுத்தியது. ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும் தனது இரங்கலைத் தெரிவித்தார். RealAudioMP3
அணுமின் நிலையக் கதிர்வீச்சு என்று சொன்னவுடன் இந்தியாவின் போபாலில் 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம்தேதி இரவு ஏற்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலை நச்சுவாயுக் கசிவு விபத்தும் நினைவுக்கு வருகிறது. 42 டன்கள் methyl isocyanate நச்சுவாயு வெளியேறியதில் உடனடியாக 2259 பேர் இறந்தனர். 72 மணி நேரத்திற்குள் எட்டாயிரம் பேர் முதல் பத்தாயிரம் பேர் வரை இறந்தனர். இதுவரை 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
எத்தனைமுறை அடிபட்டாலும் மனிதன் திருந்தவேமாட்டான் என்று நினைக்க வைக்கிறது இந்த வாரத்தில் நாம் வாசித்த ஒரு செய்தி. “இங்கேயும் ஒரு போபால்!” என்ற தலைப்பில் வந்த அச்செய்தி தமிழகத்தின் கடலூர் மாவட்ட மக்களைப் பற்றியதே. கடந்த 7-ம் தேதி இரவு, குடிகாடு கிராமத்தில் உள்ள சாஷன் கெமிக்கல் கம்பெனியில் இருந்து அமிலம் கசிந்து நச்சுவாயு பரவ... கிட்டத்தட்ட 300-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாஷன் கம்பெனியில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் குடிநீர் கெட்டுப்போய் விட்டது. விவசாயம் செய்ய முடியவில்லை என்று காரைக்காடு, ஈச்சங்காடு, பச்சையாங்குப்பம் மற்றும் குடிகாடு கிராம மக்கள் முறையிடுகின்றனர் என்று செய்தியில் வாசித்தோம். இது பற்றிக் கூறிய மாசுக் கட்டுப்பாட்டுப் பொறியாளர் ராஜா, ''ப்ரோமின் என்ற அமிலக் கசிவால்தான் இந்தப் பாதிப்பு. எனவே மேலும், அசம்பாவிதம் நடக்காமல் அந்தக் கட்டடத்தின் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்றி பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்தோம். அதோடு, கம்பெனிக்குச் சீல்வைத்துவிட்டோம்!'' என்று சொன்னதாகவும் செய்தி.
அன்பர்களே, இன்றைக்கு மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுனாமி, புயல், வெப்ப அலை, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, நிலநடுக்கம், பனிமலை உருகுதல், காலநிலை மாற்றம் போன்ற அனைத்துமே “Global Warming” என்று சொல்லப்படும் உலகின் வெப்பம் உயர்ந்து வருவதன் நேரடி அறிகுறிகள். இந்த வெப்பநிலை காரணமாக தற்போது உலகில் ஆண்டுக்கு மூன்று இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மூன்று கோடி மக்கள் பாதிப்படைகின்றனர்”. இந்நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுவாக்கில் ஆண்டுக்கு ஐந்து இலட்சம் பேர் இந்த புவி வெப்பத்தினால் உயிரிழப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பூமியின் வெப்பம் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் மனிதர் மட்டுமல்ல, 40 முதல் 70 விழுக்காட்டு உயிரினங்களும் அழியும் வாய்ப்பு உண்டு என்று பன்னாட்டுக் குழு ஒன்று கூறியுள்ளது.
சுனாமி, வெள்ளம், புயல், நச்சுவாயுக் கசிவு, வேதியக் கதிர்வீச்சு போன்ற செய்திகளைக் கேட்கும் போது இவை யாருக்கோ நடக்கிறது, இதனால் எனக்கென்ன பாதிப்பு என்று “அடுக்குமாடிக் குடியிருப்பு” கலாச்சாரத்தில் இருந்துவிட முடியாது. இந்தப் பேரழிவுகளை எதிர்நோக்கும் மனிதர், பூமித் தாயைப் பார்த்து, கடல் அன்னையைப் பார்த்து, “அம்மா எங்களைக் காப்பாற்று” என்று மன்றாடுகின்றனர். மார்ச் 15ம் தேதி “ஒனென் மட்சுறி” என்ற விழாவைச் சிறப்பிக்கும் ஜப்பானியரும் இவ்வாறுதான் செபிக்கின்றனர். இது ஓர் இயற்கைசார் விழா. இவ்விழா ஜப்பானிய விழாக்களில் தனித்துவமானது.
அதேசமயம், இயற்கைத் தாயும் நம் ஒவ்வொருவரையும் பார்த்து, “என் குழந்தாய்! என்னை நேசிப்பாயா? என்னைக் காப்பாற்றுவாயா? என்றுதானே கேட்கிறாள். அன்பர்களே, நமது சொந்த வீடு அசுத்தமடையாமல் பார்த்துக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் அதனைக் கூட்டிச் சுத்தம் செய்கிறோம். அதேபோன்று இயற்கைத்தாயை, பூமாதேவியை, கடல் அன்னையை மாசுபடாமல் காக்க வேண்டியது நமது கடமையல்லவா!
இயற்கையின் சவாலில் அழிவுண்டால் விலங்கு. இயற்கையின் சவாலை எதிர் கொண்டால் மனிதன்! உலகிற்குப் பெரிய பங்களிப்பைச் செய்தவர்கள் பலர் புகழுக்காகச் செய்யவில்லை. தன் திருப்திக்காகச் செய்தார்கள். மானுடத்தின் வளர்ச்சிக்காகச் செய்தார்கள்.








All the contents on this site are copyrighted ©.