2011-03-14 15:41:24

மார்ச் 15 வாழ்ந்தவர் வழியில் .....


நிலநடுக்கம், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் சமயங்களில் மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் தொற்று நோய்களுள் காலரா என்ற வாந்திபேதி நோயும் ஒன்று. இன்றும் உலகில் ஒவ்வோர் ஆண்டும் முப்பது இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் பேர் வரை காலராவினால் தாக்கப்படுகின்றனர். இந்நோயால் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை இறக்கின்றனர். எனினும் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்தால் இந்நோயால் தாக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினரைக் காப்பாற்ற முடியும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்தக் காலரா நோய்க்கானத் தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்தவர் அறிவியலாளர் Waldemar Mordecai Wolfe Haffkine. இவர் முற்கால இரஷ்யப் பேரரசின் Odessa வில் 1860ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி பிறந்தார். இந்த நகரம் தற்போது உக்ரேய்ன் நாட்டில் உள்ளது. இரஷ்ய யூதஇன நுண்ம ஆராய்ச்சியாளரான இவர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கு மதம் மாற மறுத்ததால் இவருடைய வாழ்வு இரஷ்யாவில் அச்சுறுத்தப்பட்டது. ஆதலால் இவர் நாட்டைவிட்டு வெளியேறி பிரான்ஸ் நாட்டு பாரிசில் Pasteur நிறுவனத்தில் வேலை செய்தார். 19ம் நூற்றாண்டில் உலகில் ஐந்து தடவைகள் காலராக் கொள்ளை நோய் அதிகமாகப் பரவியது. இதில் ஒருமுறை ஆசியாவும் ஐரோப்பாவும் கடுமையாய்த் தாக்கப்பட்டன. எனவே Haffkine இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். தான் கண்டுபிடித்த மருந்தை 1892ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி தனக்குத் தானே செலுத்திப் பரிசோதனை நடத்தினார். இந்த நோயால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததால் 1893ல் அங்குச் சென்று தாங்களாக முன்வந்த சுமார் 25 ஆயிரம் பேருக்கு இந்தத் தடுப்பு மருந்தை செலுத்தினார். மக்களின் சந்தேகம், இசுலாம் தீவிரவாதிகளின் கொலை முயற்சி, பிரித்தானிய மருத்துவ அதிகாரிகளின் எதிர்ப்பு ஆகிய இவைகளுக்கு மத்தியில் இந்தியாவில் இந்தப் பணியைச் செய்தார். 1895ல் இவரும் காலராவினால் பாதிக்கப்பட்டு பிரான்சுக்குத் திரும்பினார். ஆனால் மருத்துவர்களின் கடும் எச்சரிக்கைகளையும் மீறி, 1896ல் மீண்டும் இந்தியா சென்று ஏழு மாதங்களில் முப்பதாயிரம் பேருக்குத் தடுப்பு ஊசி போட்டார். இவர் தனது முயற்சியைக் கைவிடாமல் செயல்பட்டதால் அந்த நோயினால் இறப்பவர்களின் விகிதம் 70 விழுக்காடு குறைவதற்கு உதவினார் என்று சொல்லப்படுகிறது. இவர் 1930ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சுவிட்சர்லாந்தின் லூசெய்னில் காலமானார். அறிவியலாளர் Waldemar Mordecai Wolff Haffkineஐ "மனித குலத்தின் மீட்பர்" என்று பெயரிட்டு பாராட்டினார் Lord Joseph Lister.







All the contents on this site are copyrighted ©.