2011-03-12 15:21:55

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
இல்லத்தலைவி ஒருவர் தன் பங்குத்தந்தையைச் சந்திக்கச் சென்றார். தன் மனதில் இருந்த குழப்பத்தையெல்லாம் அவரிடம் கொட்டினார்: "சாமி, எல்லாத்தையும் விட்டுட்டு, எங்கேயாவது, கண்காணாத இடத்துக்கு போயிடணும் போல இருக்கு." என்று அவர் ஆரம்பித்தார். வீட்டு வேலை, அலுவலக வேலை, பங்குக்கோவில் வேலை என்று அனைத்தையும் விட்டுவிட அவர் நினைத்தார். பங்குத்தந்தை பலவிதமான ஆலோசனைகள் தந்தார். எதுவும் அந்த இல்லத்தலைவிக்குத் திருப்தி அளிக்கவில்லை. இறுதியாக, "எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்குப் பதில், ஒரு வாரத்திற்கு 'strike' வேலை நிறுத்தம் செய்யுங்கள்." என்று பங்குத்தந்தை சொன்ன ஆலோசனையை ஏற்றுக் கொண்டார் இல்லத்தலைவி.
வீட்டுக்குச் சென்றவர் தனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி என்று சொல்லிவிட்டு, படுத்துக்கொண்டார். அலுவலகத்திலிருந்தும் விடுமுறை எடுத்துக்கொண்டார். அவரது நிலையைக் கண்ட கணவனும், பிள்ளைகளும் அவர் மீது தனி கவனம் செலுத்த ஆரம்பித்தனர். வீட்டு வேலைகளை அனைவரும் பகிர்ந்து செய்தனர். இரண்டு நாட்கள் சென்றன. படுத்திருந்த வீட்டுத்தலைவிக்கு 'போர்' அடித்தது. தொலைக்காட்சியில் மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்துப் போனது. உதவி செய்வதாக கணவனும், பிள்ளைகளும் வேலைகள் செய்து விட்டுச் சென்றபின், சமையலறையைப் பார்த்த வீட்டுத்தலைவி பயந்து போனார். அவர்கள் செய்த வேலைகளை மீண்டும் சரி செய்ய இன்னும் பல நாட்கள் ஆகுமே என்று பயந்தார்.
ஒரு வாரம் வேலை நிறுத்தம் செய்யலாம் என்ற தீர்மானத்தில் இருந்தவர் இரண்டு நாட்களில் வேலைநிறுத்தத்தை முடித்தார். மீண்டும் தன் பணிகளை ஆரம்பித்தார். மூன்றாம் நாள் அவரைக் காண பங்குத்தந்தை வந்தபோது, அவர் வீட்டு வேலைகளை மும்முரமாய் செய்து கொண்டிருந்தார். பங்குத்தந்தையைக் கண்டதும் வீட்டுத் தலைவி, "சாமி, எந்த ஒரு சோதனையும் வரும்போது அழகாகத்தான் இருக்கு. சோதனைக்கு இடம் கொடுத்த பிறகுதான் அதனுடைய உண்மை உருவம் தெரியுது." என்று அவர் தான் பெற்ற ஞானோதயத்தை, அறிவொளியைப் பங்குத் தந்தையிடம் பகிர்ந்து கொண்டார்.
நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். சோதனைகள் நம்மை அணுகும்போது அழகாக, நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கும்... நம் மனதில் வந்து குடியேறிய பின் கதையே வேறுவிதமாய் மாறும். எந்த ஒரு சோதனைக்கும் முகம் அழகாக இருக்கும், முதுகு அழுக்காக, அருவருப்பாக இருக்கும். சோதனைகளைப் பற்றி நாம் இன்னும் சிறிது அறிவொளி பெற இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று சோதனைகளைப் பற்றி சிந்திக்க நமக்கு ஓர் அழைப்பு தரப்படுகிறது. இன்றைய முதல் வாசகம் நமது முதல் பெற்றோர் சந்தித்த சோதனையையும், நற்செய்தி இயேசு சந்தித்த சோதனையையும் சொல்கின்றன. சோதனை என்பது மனிதராய்ப் பிறந்த அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம். இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. எந்த ஒரு சூழலிலும் சோதனைகள் வரும். இறைவனின் புனிதமான சன்னதியிலும், இரைச்சல் நிறைந்த சந்தையிலும் சோதனைகள் வரும். கனிகள் பழுத்துத் தொங்கும் தோட்டத்திலும், மனித நடமாட்டமே இல்லாத பாலை நிலத்திலும் சோதனைகள் வரும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.

தன் பணி வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன், தந்தையாம் இறைவனைத் தனியே சந்திக்கச் சென்றிருந்த இயேசுவைச் சோதனையும் சந்தித்தது. இந்தச் சோதனைகளை இயேசு சந்தித்தார் என்பதற்கு ஒரே ஒரு சாட்சிதான் உண்டு. இயேசு மட்டுமே அந்த சாட்சி. தனிப்பட்ட வகையில் அவர் சந்தித்தச் சோதனைகளைப் பற்றி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளும் கூறுகின்றன. சுய விளம்பரத்தைச் சுத்தமாக விரும்பாத இயேசு, தனக்குத் தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த இந்தச் சோதனைகளை ஏன் பிறரோடு பகிர்ந்து கொண்டார் என்ற கேள்வி எழுகிறது. தான் சந்தித்தச் சோதனைகள், அவற்றைத் தான் வென்ற வழிகள் இவைகளைப் பகிர்ந்து கொண்டால், மற்றவர்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் இயேசு சீடர்களிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கலாம். இயேசுவின் இந்த அனுபவம் சொல்லித்தரும் பாடங்கள் என்ன?

சோதனைகள் அழகானவை என்பது முதல் பாடம். இயேசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கேன். அந்த நாடகங்களில் எல்லாம் அவர் சோதிக்கப்பட்ட காட்சி கட்டாயம் இருக்கும். அந்தக் காட்சிகளில் சாத்தான் கருப்பு உடையுடன், முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, நீண்ட இரு பற்களோடு பயங்கரமாய் சிரித்துக் கொண்டு வரும். சிறு வயதில் பல முறை நான் அந்தக் காட்சியைப் பார்த்து பயந்திருக்கிறேன். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது அதை விரட்டி அடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்க இருக்கும் சாத்தான்களும், அவை கொண்டு வரும் சோதனைகளும் பயத்தில் நம்மை விரட்டுவதற்கு பதில், அன்போடு நம் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்கின்றன என்பதுதானே நம் அனுபவம். சோதனைகளும், சாத்தான்களும் அவ்வளவு அழகானவை.

மேலோட்டமாகப் பார்த்தால், இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் நல்ல சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி சாத்தான் இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகள் அதிகமாகும்போது, அந்தத் தேவைகளை உடனேயே தீர்த்துவிடத் துடிக்கும்போது குறுக்கு வழிகளில் செல்லும் சோதனைகள் அதிகமாகின்றன.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகை இயேசுவுக்குக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்க வேண்டும். அப்படி குதித்தால், உடனே வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையைத் தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஓர் ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் மக்கள், ஏன்... உலக மக்கள் அனைவரும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.

30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமான பணி, இறுதி 3 நாட்கள் கடும் வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை. ஒரு சில நிமிடங்கள் போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும். சுருக்கமான வழி... எளிதான முயற்சி... எக்கச்சக்கமான வெற்றி. தமிழ் நாட்டில் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தச் சோதனையின் பல எதிரொலிகள் கேட்கப்போகின்றன.

இவ்விரு சோதனைகளிலும் சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகான வரிகள். "நீர் இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்." "நீர் இறைமகன் என்றால், கீழே குதியும்." சிறுவர்கள் விளையாடும் போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனாய் இருந்தால்... இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அந்தச் சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விடும். இதற்கு பயந்து, வீர சாகசங்கள் செய்து அடிபட்டுத் திரும்பும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம்.

இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான். "நீர் இறை மகன் என்றால்..." என்று சாத்தான் சொல்வதைக் கேட்கும்போது, மற்றொரு ஆழமான எண்ணமும் எழுகிறது. இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன் புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுயத் தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள புதுமை செய்ய வேண்டும்.

தன் சக்தியை நிலை நாட்ட புதுமைகள் செய்பவர்கள் வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்க முடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது. தன் சுய தேவைகளுக்கு, சுய விளம்பரத்திற்குப் புதுமைகள் செய்வது புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.

இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலில் பாடங்கள் பல உண்டு. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்ம பசி தீர்க்கும் இறைவார்த்தை என்ற உணவைப் பற்றி பேசினார். “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” என்று இணைச்சட்ட நூலில் மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார். (இணை. 8:3) தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? சுயத்தேவைகளை நிறைவு செய்வதற்காகவா? சிந்திக்கலாம்... இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. திருப்பாடல் 91: 11-12 என்ற பகுதியை, இறை வார்த்தையைப் பயன்படுத்தி அலகை ஆலோசனை வழங்குகிறது. சாத்தானுக்கு வேதம், விவிலியம் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. "சாத்தானும் வேதம் ஓதும்" (Even the devil can quote the Bible) என்ற பழமொழி உண்டு. வேதங்கள், வேதநூல்கள் உட்பட நல்லவைகள் பலவும் பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஓர் உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதி மன்றங்களில் விவிலியத்தின் மீது அல்லது பிற வேத நூல்களின் மீது சத்தியப் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி.

மூன்றாவது சோதனையில் உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே! அப்படி இயேசு உலகை தன் மயமாக்க வேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டும். சாத்தானோடு சமரசம் செய்ய வேண்டும்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானை விரட்டி அடித்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.
தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவைகள் முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக் கொள்வதும், தீமைகள் நடக்கும் போது கண்களை மூடிக் கொள்வதும்... இப்படி நடப்பதற்குக் காரணம், ஊரோடு ஒத்து வாழ்தல் என்று உபதேசம் செய்வதும்... நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.
சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுருக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மை வந்தடையும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக் கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தவக்காலம் நல்லதொரு நேரம்.







All the contents on this site are copyrighted ©.