2011-03-11 13:34:10

மார்ச் 12. வாழ்ந்தவர் வழியில்...........


சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியத்தையும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளையும் நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.
இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளுக்கு விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளைச் செய்வது சாகித்ய அகாதமி.
இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும் அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது.
முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்குத் தெரிவாகி, அகாதமி செயற்குழுவின் அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.
1955ம் ஆண்டிலிருந்து இதுவரை, ரா. பி. சேதுப்பிள்ளை, கல்கி கிருஷ்ணமூர்த்தி, சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, மு. வரதராசனார், அகிலன், ம. பொ. சிவஞானம், கி. வா. ஜகந்நாதன், பாரதிதாசன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கண்ணதாசன், லா. ச. ராமாமிர்தம், சு. சமுத்திரம், கி. ராஜநாராயணன், கோவி. மணிசேகரன், அப்துல் ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, கடந்த ஆண்டில் நாஞ்சில் நாடன் உட்பட 51 தமிழ் எழுத்தாளர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.