2011-03-11 16:35:04

கர்தினால் சாரா : புருண்டி நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபையின் பணிகளுக்கு அரசுத் தலைவர் நன்றி


மார்ச் 11,2011. கல்வி, நலவாழ்வு, வளர்ச்சி போன்ற துறைகளில் கத்தோலிக்கத் திருச்சபை தனது காரித்தாஸ் நிறுவனத்தின் வழியாகச் செய்து வரும் பணிகளுக்குப் புருண்டி நாட்டு அரசுத் தலைவர் Pierre Nkurunziza நன்றி தெரிவித்ததாகக் கூறினார் கர்தினால் இராபர்ட் சாரா.
ஆப்ரிக்க நாடான புருண்டிக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் Muyaga நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பெயரில் இச்சனிக்கிழமை புதி்ய பள்ளி ஒன்றைத் திறந்து வைத்துத் திரும்பியுள்ளத் திருப்பீட Cor Unum பிறரன்பு அவையின் தலைவரான கர்தினால் சாரா இவ்வாறு கூறினார்.
இந்தப் பள்ளித் தொடங்கப்பட்டுள்ள Cankuzo பகுதியில் குறைந்தது ஐந்து இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்ல வசதியில்லாமல் இருப்பதால் இப்புதிய பள்ளி உண்மையிலேயே அம்மக்களுக்கு இறைவனின் கொடையாக இருக்கின்றது என்றார் கர்தினால்.
புருண்டியில் சுமார் 40 விழுக்காட்டினர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் சாரா, அந்நாட்டின் அரசுத் தலைவர், கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிவரும் நற்பணிகளைப் பாராட்டியதோடு, திருப்பீடத்தோடு விரைவில் ஓர் உடன்பாடு ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.
இப்புதிய பள்ளி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய நிதியுதவியைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் இடம் பெற்ற அந்நாட்டில் தற்போது ஹூட்டு மற்றும் டுட்சி இன மக்கள் நல்லிணக்கத்துடன் வாழத் தொடங்கியிருப்பதாகவும் கர்தினால் சாரா வத்திக்கான் வானொலிக்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.