2011-03-10 15:43:29

நாசரேத்தூர் இயேசு பற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இரண்டாவது புத்தகம் வெளியிடப்பட்டது


மார்ச் 10,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் “நாசரேத்தூர் இயேசு” - இரண்டாவது பாகம் என்ற நூல் நிருபர் கூட்டத்தில் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.
“நாசரேத்தூர் இயேசு – புனித வாரம் : எருசலேமில் நுழைவதிலிருந்து உயிர்ப்பு வரை” (Jesus of Nazareth - Holy Week: From the Entrance into Jerusalem to the Resurrection) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தில், இயேசு அரசியல் புரட்சியாளர் என்ற எண்ணத்தை அகற்றியிருப்பதோடு வன்முறை கடவுளின் பணியோடு ஒத்திணங்கிச் செல்லாதது என்று கூறியுள்ளார்.
இயேசு அழிப்பவராக வரவில்லை, அவர் புரட்சியாளரின் கத்தியைக் கொண்டு வரவில்லை என்று கூறியுள்ள அவர், இயேசு குணப்படுத்தும் கொடையோடு இவ்வுலகிற்கு வந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு மறுதலிக்கப்பட்டது, சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டது ஆகிய நற்செய்திப் பகுதிகளை அலசியுள்ள திருத்தந்தை, அனைத்துப் பாவிகளும், இந்த மனித சமுதாயம் முழுவதுமே கிறிஸ்துவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சாத்தான் திருச்சபையில் நுழைந்து தவறானச் செயல்களைச் செய்வதற்குத் திறமை வாய்ந்தவனாக இருக்கிறான், இதுவே இப்பொழுது திருச்சபையில் நடந்து வருகிறது, எனவே திருச்சபை அங்கத்தினர்கள் திருச்சபைக்குள் இடம் பெறும் பாலியல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு விழிப்பாய் இருக்குமாறும் அப்புத்தகத்தில் கேட்டுள்ளார் திருத்தந்தை.
புதிய ஏற்பாட்டுச் செய்தி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது என்று இந்நூலில் கூறியுள்ள அவர், இயேசுவை ஓர் ஆன்மீக மற்றும் வரலாற்று நாயகனாக அதில் விவரிக்க முனைந்துள்ளார் என்றும் தெரிகிறது.
ஒன்பது அதிகாரங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் இத்தாலியம், ஜெர்மானியம், ஸ்பானியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச் என ஏழு மொழிகளில் 12 இலட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.
ஜெர்மானியத்தில் இரண்டு இலட்சம், ஆங்கிலத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம், ப்ரெஞ்ச் மற்றும் இஸ்பானியத்தில் ஒரு இலட்சம் என இது அச்சிடப்பட்டுள்ளது.
E-Book, audio book ஆகிய வடிவங்களிலும் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இயேசுவின் துவக்ககாலப் பணிகளை விளக்கும் “நாசரேத்தூர் இயேசு” என்ற திருத்தந்தையின் முதல் புத்தகம் அது வெளியிடப்பட்ட 2007ம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவில் விற்பனையில் முதலிடத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.