2011-03-10 15:11:29

மார்ச் 11 - வாழ்ந்தவர் வழியில்.....


அலெக்ஸாண்டர் பிளெமிங் (Alexander Fleming) பெனிசிலினைக் கண்டுபிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கி வைத்த பெருமைக்குரிய விஞ்ஞானி. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், 13வது வயதில் இலண்டன் சென்று படித்து மருத்துவரானார். பல்வேறு வகை நுண்ணுயிர்களைத் தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்தத் திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் சக்தி இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோஸைம்’ எனப் பெயரிட்டார்.
1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோஸைம் அதுவரை செய்திராத ஒரு செயலைக் காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளைக் காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர். 1945ஆம் ஆண்டில் ஹோவர்டு ஃப்ளோரே, (Florey) எர்னஸ்ட் செயின் (Chain) ஆகிய இருவருடன் சேர்ந்து நொபெல் மருத்துவ விருது பெற்றார் அலெக்ஸாண்டர் பிளெமிங். இவர், 1881ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி பிறந்து 1955ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி காலமானார்.
உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்குமுன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். இலேசான சிராய்ப்புகளும் கீறல்களும்கூட மரணத்திற்கு இட்டுச்சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிசிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலின் உலகெங்கிலுமுள்ள சுமார் இருபது கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.







All the contents on this site are copyrighted ©.