2011-03-10 15:44:13

மத்தியப் பிரதேச தலைநகரின் பெயர் மாற்றத்திற்கு பேராயர் லியோ கொர்னேலியோ எதிர்ப்பு


மார்ச் 10,2011. மத்தியப் பிரதேசத்தின் தலைநகராகிய போபாலுக்கு வேறொரு பெயர் சூட்டும் முயற்சியில் அம்மாநிலத் தலைவர் ஈடுபட்டிருப்பது மக்களாட்சி நியமங்களுக்கு எதிரானது என்று போபால் உயர் மறைமாவட்டப் பேராயர் லியோ கொர்னேலியோ கூறினார்.
மத்திய பிரதேச மாநில முதல்வர் Shivraj Singh Chauhan மார்ச் மாதத் துவக்கத்தில் செய்தியாளர்கள் கூட்டமொன்றில் பேசியபோது, தலைநகர் போபாலுக்கு முற்கால மன்னர் Raja Bhojன் பெயரைச் சூட்ட தான் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து பல சமுதாய அமைப்புக்கள் குரல் கொடுத்தன.
ஒரு மாநிலத் தலைநகரின் பெயரை மாற்றுவது மிக முக்கியமான ஒரு காரியம் எனவே மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் முதல்வர் தனியே முடிவெடுப்பது மக்களாட்சி முறைகளுக்கு எதிரானது என்று பேராயர் கொர்னேலியோ கூறினார்.
மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பொதுவான பெயர்களை மாற்றி, பழங்கால மன்னர்களின் பெயர்களை வைப்பதில் மதசாயம் பூசும் உள்நோக்கம் இருப்பது தெரிகிறதென்று பேராயர் சுட்டிக் காட்டினார்.26 ஆண்டுகளுக்கு முன் Union Carbide தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் பல்லாயிரம் உயிர்கள் பலியானதால் போபால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு நகரம் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.