2011-03-09 15:28:36

மார்ச் 10. – வாழ்ந்தவர் வழியில்........,


"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

இவ்வாறு, தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார்.
பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 1933 மார்ச் மாதம் 10ந்தேதி பிறந்தவர். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்பதாகும்.
பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பாவாணர் விருப்பப்படி “தென்மொழி” என்னும் பெயரில் ஓர் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார்.
இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப்பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது “ஐயை” என்னும் தனித்தமிழ்ப் படைப்பின் முதல் தொகுதியை எழுதினார்.
தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.
இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது “ஐயை” நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு “கனிச்சாறு” என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக 1979ல் வெளிவந்தது.
பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவதாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவதாகவும் விளங்குவது இவர்தம் “கனிச்சாறு” நூலாகும். தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார். 27 நூல்களை வடித்துள்ளார் இவர்.
மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 1995 ஜூன் 11ல் இயற்கை எய்தினார்.








All the contents on this site are copyrighted ©.