2011-03-09 15:29:40

திருத்தந்தை : சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மனிதன் தனது வாழ்வு நிலையை மாற்ற வேண்டும்


மார்ச் 09,2011. நம்மைச் சுற்றியுள்ள உலகோடு சரியான உறவைக் கொண்டிருக்க வேண்டுமானால், மனிதன் கடவுள் அல்ல, மாறாக, அவன் கடவுள் சாயாலாகப் படைக்கப்பட்டவன் என்பது குறித்தப் புரிதல் அவசியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதன்கிழமை தொடங்கும் தவக்காலத்தை முன்னிட்டு பிரேசில் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Geraldo Lyrio Rochaவுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் முதலில் “மனிதச் சுற்றுச்சூழல்” சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றார்.
“சகோதரத்துவமும் இப்பூமிப்பந்தில் வாழ்வும்” என்ற தலைப்பில், பிரேசில் திருச்சபை இவ்வாண்டு தவக்காலத்தைக் கடைபிடிப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மனிதன் தனது வாழும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனித வாழ்வு தாயின் உதரத்தில் கருவான நேரமுதல் இயற்கையான மரணம் அடையும் வரை அது பாதுகாக்கப்படாவிட்டால், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயானத் திருமணத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பம் பாதுகாக்கப்படாவிட்டால், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களும் இயற்கைப் பேரிடர்களில் அனைத்தையும் இழந்தவர்களும் பாதுகாக்கப்படாவிட்டால் உண்மையானச் சுற்றுச்சூழல் குறித்துப் பேச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் தமது படைப்பை மனிதனிடம் ஒப்படைத்துள்ளான் என்ற விழிப்புணர்வு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாதது என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.தென் அமெரிக்க நாடான பிரேசில், உலகில் அதிகமான கத்தோலிக்கரைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.