2011-03-09 15:31:20

எகிப்தின் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களும் இஸ்லாமியரும் கெய்ரோ நகர வீதிகளில் ஆர்ப்பாட்டம்


மார்ச் 09,2011. தீக்கிரையாக்கப்பட்ட எங்கள் கோவில்களை மீண்டும் எங்களுக்குத் தாருங்கள் என்று எகிப்தின் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் இச்செவ்வாயன்று கெய்ரோ நகர வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த சனிக்கிழமை தீவைத்து கொளுத்தப்பட்ட புனித மினாஸ் மற்றும் ஜார்ஜ் ஆலயத்தை மீண்டும் எகிப்து அரசு கட்டித் தர வேண்டுமென்று கெய்ரோவில் 8000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் எகிப்தில் புரட்சிக் கூட்டங்கள் நடைபெற்ற Tahrir வளாகத்தில் அமைந்துள்ள எகிப்து தொலைக்காட்சி நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, எகிப்தின் தற்போதைய பிரதமர் Essam Sharaf காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களின் பிரதிநிதிகளை இச்செவ்வாயன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் முடிவில், தற்போது அரசு அதிகாரத்தில் இருக்கும் இராணுவக் குழ்விடம் பேசி இதற்குத் தகுந்த ஒரு தீர்வு காண முயல்வதாகவும் பிரதமர் வாக்களித்தார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இதுவரை எகிப்தில் எந்த ஓர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடாத சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் முதல் முறையாக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் இதுவென்றும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இஸ்லாமியர்களும், சிறப்பாக, இஸ்லாமியப் பெண்களும் ஆதரவு தந்திருப்பது மிகவும் உற்சாகமூட்டுகிறதென்றும் கிறிஸ்தவர்களின் சார்பாகப் பேசிய அருள்தந்தை Rafik Greiche ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.