உணவின்றி வாடும் பல குழந்தைகளைக் காக்கும் முயற்சிகளைத் தவக்காலத்தில் மேற்கொள்ள வேண்டும்
- பிலிப்பின்ஸ் கர்தினால்
மார்ச் 09,2011. தவக்காலத்தில் மேற்கொள்ளும் பல உண்ணாநோன்பு முயற்சிகளால் சேமிக்கும்
பணத்தைக் கொண்டு, உணவின்றி வாடும் பல குழந்தைகளைக் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று
பிலிப்பின்ஸ் கர்தினால் Gaudencio Rosales கூறினார். ஆசியாவிலேயே கிறிஸ்தவர்களை அதிக
அளவில் கொண்டுள்ள பிலிப்பின்ஸ் நாட்டில், இப்புதனன்று துவக்கப்பட்டுள்ள தவக்காலத்தையொட்டி
பல பிறரன்பு முயற்சிகளை ஆரம்பித்து வைத்த மணிலா உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Rosales
இவ்வாறு கூறினார். இத்தவக்காலத்தில் இளையோரிடையே தியாகத்தையும், பிறரன்பு சேவையையும்
வலியுறுத்தும் முயற்சிகளை ஹாங்காங் தலத்திருச்சபை மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தலத்திருச்சபை
போரினால் அனைத்தையும் இழந்தவர்கள், முக்கியமாக விதவைகள், அனாதைகள் ஆகியோருக்கு உதவிகள்
செய்ய "கிறிஸ்துவே நமது நம்பிக்கை" என்ற மையக் கருத்துடன் தவக்கால செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளது.இதேபோல்
இந்தோனேசியா, மியான்மார், கொரியா, பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய அனைத்து ஆசிய நாடுகளின்
தலத்திருச்சபைகளும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்டுள்ள தவக்காலச் செய்திகளை மையப்படுத்தி
பல்வேறு முயற்சிகளை அறிவித்துள்ளன என்று UCAN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.