2011-03-07 10:30:59

மார்ச் 07. வாழ்ந்தவர் வழியில்.....


காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் தெரியுமா?
சிவகங்கையில் 1897 மே 11இல் பிறந்து, - 1990 மார்ச் 7இல் இறைபதம் சேர்ந்த கவியோகி, மகரிஷி என்று போற்றப்படும் சுத்தானந்த பாரதியார். கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவர்.
1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் பெற்ற பெருமை கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதி அவர்களையே சேரும். அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான "பாரத சக்தி மகாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய ஒப்பற்ற படைப்பு! திருக்குறளை சரியாக, அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சரியான நபர் "கவியோகி சுத்தானந்த பாரதியார் தான்", எனத் தேர்வு செய்து, 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது!
இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றியவர் இவர்.








All the contents on this site are copyrighted ©.