2011-03-07 15:34:40

குருக்களுக்கான திருப்பேராயத் தலைவரின் தவக்காலச் செய்தி.


மார்ச் 07, 2011. விசுவாசிகளுக்கு வழங்குவதற்கென தன்னிடம் தரப்பட்டுள்ள போதனைகளுக்கு இயைந்த வகையில் ஒவ்வொரு குருவும் தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்வதே மனமாற்றம் என அர்த்தப்படும் என்கிறார் குருக்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் மௌரோ பியசென்ஸா.
இப்புதனன்று திருநீற்றுப் புதனோடுத் துவங்கும் தவக்காலத்திற்கென செய்தியொன்றை உலகின் குருக்களுக்கு அனுப்பியுள்ள கர்தினால், ஒவ்வொரு குருவின் வாழ்வும், வாழும் நற்செய்தியின் பாடலாக மாறி மற்றவர்கள் பார்த்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குருவும், நல்லாயனாம் கிறிஸ்துவின் சாயல் என்பதால் நம் இதயம், மனம் மற்றும் செயற்பாடுகளினால் உறுதிச் செய்யப்பட்டு நம் உண்மை நிலைக்குத் திரும்புவதற்கான மனமாற்றத்தைப் பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பியசென்ஸா.
தன் தனித்தன்மையைக் கண்டுகொள்ள ஒரு குருவுக்கு திருப்பலிக் கொண்டாட்டம் உதவுகிறது எனக்கூறும் கர்தினால், புதிய நற்செய்தி அறிவிப்பின் தேவையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்துவுடன் ஆன ஒன்றிப்பிற்கான மன மாற்றம், மற்றும் நற்செய்தி விடுக்கும் மனமாற்றத்திற்கான அழைப்பு ஆகியவை குறித்தும் குருக்களுக்கான தன் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் குருக்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் பியசென்ஸா.








All the contents on this site are copyrighted ©.