2011-03-05 14:18:34

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியவர் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு அமெரிக்க ஆயர் கண்டனம்


மார்ச்05,2011. பாகிஸ்தானில் அனைத்துச் சிறுபான்மையினரின் குறிப்பாகக் கிறிஸ்தவரின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய அமைச்சர் ஷபாஸ் பாட்டி கொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சர்வதேச நீதி மற்றும் அமைதி விவகார ஆணையத் தலைவர் ஆயர் Howard Hubbard தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ஷபாஸ் பாட்டி, பாகிஸ்தான் சமுதாயத்தில் சமய சகிப்புத்தன்மையை வளர்க்கும் நோக்கத்தில் பல்சமய உரையாடலை ஊக்குவித்து வந்தவர் என்றும் அவரின் தைரியமிக்க குரல் மௌனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆயர் Hubbard கூறினார்.
ஷபாஸ் பாட்டியின் கொலை, வன்முறையின் விவரிக்க முடியாத செயல் என்றுரைத்த ஆயர், வன்முறையால் நசுக்கப்படும் கிறிஸ்தவர்கள் மற்றும் சமய சுதந்திரம் உடனடியாகப் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தை ஒவ்வொருவரும் உணருமாறு வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்படும் சிறுபான்மை சமூகங்கள் உட்பட அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகளும் சமய சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்குத் தெளிவான நடவடிக்கைகள் எடுப்பதில் பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு சேர்ந்து செயல்படுமாறு ஆயர் கேட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.