2011-03-05 15:43:02

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 "கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்" என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பழமொழி. கல்யாணம் பண்ணுவதையும், வீட்டைக் கட்டுவதையும் இந்தப் பழமொழியில் ஏன் இணைத்தனர் என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இரு முயற்சிகளிலும் திட்டமிடுதல், நுண்ணிய கவனம், வரவுக்கு உள்ளான செலவு, தடைகளைத் தாண்டும் திறமை, என்ற பல குணங்கள் தேவைப்படுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம், வீடு இரண்டும் வெற்றிகரமாக பல காலம் நீடிக்க பொறுமையும் தேவை என்பதைக் கூறவே இவ்விரண்டையும் இப்பழமொழியில் இணைத்துள்ளனர் என்பது என் கணிப்பு.
அவசரமாக முடிக்கப்படும் திருமணங்கள், அவசரமாகக் கட்டப்படும் வீடுகள் அதிகக் காலம் தாக்குப்பிடிக்காது என்பதையும் நாம் அறிவோம். இன்றைய நற்செய்தி இந்தப் பழமொழியை நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது.
கடந்த ஐந்து வாரங்களாய் நாம் சிந்தித்து வரும் இயேசுவின் மலைப்பொழிவுப் பகுதி இன்று ஆறாம் வாரமாக ஒரு நிறைவுக்கு வருகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு முன் இரு பாடங்களை வைக்கிறார். அவைகளைச் சவால்களாகவும் நாம் காணலாம்.

ஆண்டவரே, ஆண்டவரே என்று கடவுளின் பெயரைச் சொல்வதால் மட்டும் விண்ணரசில் நுழைய முடியாது. இறைவனின் விருப்பப்படி நடப்பதே விண்ணரசின் கதவுகளை நமக்குத் திறக்கும்... என்பது இயேசு நமக்குத் தரும் முதல் சவால். நாம் வாழும் இன்றையச் சூழலில் நமக்கு அதிகம் தேவையான ஒரு பாடம் இது. கடந்த வாரம் புதன்கிழமை பாகிஸ்தானின் சிறுபான்மைத்துறை அமைச்சராய் பணி புரிந்த Shahbaz Bhatti அடையாளம் தெரியாத ஒரு குழுவால் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது நாம் அறிந்த செய்தி. இறைவனின் பெயரால், மதங்களின் பெயரால் மனித வரலாற்றில் நடந்துள்ள பாதகச்செயல்களை எண்ணிப்பார்க்க இயேசுவின் இந்தச் சவால், இந்த எச்சரிக்கை ஒரு வாய்ப்பைத் தருகிறது.
கடவுளின் பெயரை உச்சரித்தபடியே மனித உயிர்களைப் பறித்தவர்கள் எல்லா மதங்களிலும் இருந்துள்ளனர். இன்றும், கடவுளின் பெயரால், இந்த இரத்த வரலாற்றைத் தொடர்ந்து எழுதி வரும் அடிப்படைவாதக் குழுவினரை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அவர்களுக்காக இறைவனின் கருணையை வேண்டுவோம். இறைவனின் பெயரைச் சொல்லியபடியே, கொலை வெறியையும், வெறுப்பையும் உலகில் விதைக்கும் இவர்கள் கடவுளின் திருமுன் செல்லும்போது, "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என்று அவர் கூறும் வாய்ப்பு அதிகம் உண்டு.

இயேசு இன்று நமக்கு வழங்கும் இரண்டாவது சவாலில் நாம் இன்றைய சிந்தனையை அதிகம் செலவழிப்போம். இறைவார்த்தைகளைக் கேட்டு செயல்படுகிறவர்கள், பாறை மீது வீடு கட்டுகிறவர்களுக்கு ஒப்பாவர் என்பது இயேசு நமக்குத் தரும் இரண்டாம் பாடம்.

செல்வந்தர் ஒருவர் தன்னிடம் பல ஆண்டுகள் பணி செய்த மேனேஜரை ஒரு நாள் கூப்பிட்டார். "நான் ஓராண்டு வெளிநாடு செல்கிறேன். நான் திரும்பி வருவதற்குள் எனக்காக ஓர் அழகான வீட்டை நீங்கள் கட்டி முடிக்கவேண்டும். ஏரிக்கரை ஓரமாக எனக்குச் சொந்தமான இடத்தில் இந்த வீட்டைக் கட்டுங்கள்." என்று சொல்லி, அந்த வீட்டுக்கான வரைப்படம், அதற்கு ஆகும் தொகை அனைத்தையும் மேனேஜரிடம் கொடுத்தார்.
கோணல் புத்தியுடைய மேனேஜர், முதலாளி கொடுத்தத் தொகையில் பாதிக்கு மேல் சுருட்டிக் கொண்டு, மீதித் தொகையில் ஒரு பரிதாபமான, உறுதியில்லாத வீட்டைக் கட்டினார். வெளியிலிருந்து பார்க்க மிக அழகாக, பிரம்மாண்டமாகத் தெரிந்தது அந்த வீடு.
ஓராண்டு சென்று முதலாளி மீண்டும் வந்தார். தான் கட்டி முடித்திருந்த அந்த வீட்டுக்கு முதலாளியை அழைத்துச் சென்றார் மேனேஜர். முதலாளி அந்த வீட்டைப் பார்த்து பிரமித்துப் போனார். பார்க்க அவ்வளவு பகட்டாக இருந்தது அது. அவர் மேனேஜர் பக்கம் திரும்பி, "வீடு பிரமாதமா இருக்கிறதே!" என்று வியந்தார். மேனேஜரும் ஒப்புக்காக, "பிரமாதமான வீடு சார். இதில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்." என்று கொஞ்சம் மிகைப்படுத்திப் பேசினார்.
"அந்த கொடுத்து வைத்தவர் நீங்கள் தான் மேனேஜர். இந்த வீடு இன்று முதல் உங்களுக்குத் தான்." என்று முதலாளி சொன்னதும், மேனேஜர் முகம் பயத்தில் வெளிறிப் போனது. "ஆம், மேனேஜர். இதை ஓர் ஆச்சரியமான பரிசாக உங்களுக்குத் தர வேண்டுமென்றுதான் முன்னதாகவே இதை உங்களிடம் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் எனக்காக உழைத்தீர்கள். அடுத்த ஆண்டு ஓய்வெடுக்கப் போகிறீர்கள். உங்கள் உழைப்பிற்கான என் எளிய பரிசு இது." என்றார் முதலாளி. மேனேஜரால் ஒன்றும் பேச முடியவில்லை. அவர் ஆனந்த அதிர்ச்சியில் வாயடைத்து நிற்பதாய் முதலாளி நினைத்துக் கொண்டார்.
மேனேஜரின் வாய்தான் பேசமுடியாமல் போனதே தவிர அவரது மனம் ஆயிரம் பேசியிருக்கும். "அடப்பாவி... இந்த வீடு எனக்குத்தான்னு முன்னாலேயே சொல்லியிருந்தா, எப்படி கட்டியிருப்பேன்… இப்ப வந்து சொல்றியே." என்ற பாணியில் அவர் மனம் முதலாளியை வசை பாடியிருக்கும். தன்னுடைய வீட்டைத் தானே அரைகுறையாய் கட்டிவிட்டோமே என்று மீதி நாட்கள் அவர் வருந்தியிருக்க வேண்டும்.

கதையை இப்படி நினைத்துப் பார்ப்போம். முதலாளி வெளிநாடு போவதற்கு முன், மேனேஜரிடம் தன் நிலம், வரைபடம், பணம் எல்லாவற்றையும் கொடுத்து "மேனேஜர், உங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ளுங்கள்." என்று சொல்லியிருந்தால், மேனேஜர் என்ன செய்திருப்பார்?
முதலாளி தனக்குக் கொடுத்த நிலம் சட்டப்படி அவருடையதுதானா என்பதில் ஆரம்பித்து, அந்த நிலம் வீடு கட்டுவதற்கு ஏற்ற நிலமா என்ற அனைத்து ஆராய்ச்சிகளையும் நுணுக்கமாகச் செய்திருப்பார். அதற்குப் பின், அங்கு வைக்கப்படும் ஒவ்வொரு செங்கலுக்கும் கணக்குப் பார்த்து, வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் உறுதியாக இருக்கிறதா என்பதையும் கவனமாகப் பார்த்து அந்த வீட்டைக் கட்டியிருப்பார்.

இப்படி கவனமாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டைப் பற்றிய மற்றொரு செய்தி இது. 1992ம் ஆண்டு Hurricane Andrew என்ற சூறாவளி தென் Floridaவின் பல பகுதிகளைத் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றது. சூறாவளி வீசி ஓய்ந்தபின், அந்தப் பகுதி போரில் குண்டு வீசி அழிந்துபோன ஒரு பகுதி போல காட்சி அளித்தது. ஒரே ஒரு வீடு மட்டும் பாதிப்பு அதிகம் இன்றி நின்றது. அவ்வீட்டுத் தலைவனைப் பத்திரிக்கையாளர்கள் பேட்டிக் கண்டனர். "உங்கள் வீடு மட்டும் எப்படி இந்த சூறாவளியைச் சமாளித்தது?" என்று அவர்கள் கேட்டனர். "இது எனக்கென்று நானே கட்டிய வீடு. Florida மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் சிறிதும் பிசகாமல் நான் இந்த வீட்டைக் கட்டினேன். இப்பகுதியில் சூறாவளிகள் அடிக்கடி வீசுவதால், இம்மாநிலத்தின் விதிமுறைகள் படி கட்டப்படும் வீடுகள் சூறாவளியை எதிர்க்கும் சக்தி பெற்றவை என்று என்னிடம் அதிகாரிகள் சொன்னதால், நான் இப்படி கட்டினேன். அவர்கள் சொன்னது உண்மைதான்." என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

இந்த இரு கதைகளையும் இணைத்து சிந்திக்க முயல்வோம். வீடு கட்டுவதையும், இறைவார்த்தைகளைக் கேட்டு வாழ்வைக் கட்டுவதையும் இயேசு ஒப்புமைப்படுத்தியுள்ளார். இவ்விரண்டிலும் இரு நிலைகளை நாம் சிந்திக்க முயல்வோம். வீடு கட்டுவதில் மிகவும் அடிப்படையான ஒரு நிலை எந்த ஒரு சட்டத்தையும் மீறாமல் வீட்டைக் கட்டுவது. இரண்டாவது நிலை... சிறிது உயர்ந்த நிலை. கலைஞன் ஒருவன் கலை படைப்பை உருவாக்குவதைப் போல் முழு ஈடுபாட்டுடன் கவனமாய் வீட்டைக் கட்டுவது இரண்டாவது நிலை.
இயேசு நம்மை இரண்டாவது நிலைக்கு அழைக்கிறார். இறைவனை ஆண்டவரே, ஆண்டவரே என்று அழைப்பதைவிட, இறைவனின் வார்த்தைகளை வெறும் மந்திரங்களாகச் சொல்லிக் கொண்டிருப்பதைவிட, அவ்வார்த்தைகளை வாழ்வாக அமைத்துக் கொள்வதே சிறந்ததென இயேசு கூறுகிறார். ஒருவர் தனக்கென முழு ஈடுபாட்டுடன் அமைத்துக் கொள்ளும் வீட்டைப் போன்றது அந்த வாழ்வு. இறைவார்த்தை என்ற உறுதியான பாறை மீது கட்டப்பட்டிருக்கும் அந்த வாழ்வில் வீசும் எந்த வித சூறாவளியும் நம்மைச் சாய்த்துவிட முடியாது என்பது இயேசு தரும் உறுதி.

இறுதியாக ஒரு சிந்தனை... பெருமழை, வெள்ளம், சூறாவளி நேரங்களில் யாரும் வீடுகள் கட்டுவது இல்லை. நல்ல, அமைதியானச் சூழலில் உறுதியாய் கட்டப்பட்ட வீடுகளில் சூறாவளியின்போது நாம் நம்பிக்கையுடன் தஞ்சம் புக முடியும். அதேபோல், வாழ்வில் சூறாவளிகள் வீசும்போது மட்டும் இறைவார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான். நமது அனுதின வாழ்வில் இறைவார்த்தைகளை உள்வாங்கி, அந்த அடித்தளத்தில் வாழ்வை நாம் கட்டிஎழுப்பினால், வீசும் சூறாவளிகள் நேரத்தில் அந்த வாழ்வில் நாம் நம்பிக்கையுடன் தஞ்சம் புக முடியும்.

இயேசு இன்றைய நற்செய்தியில் கூறியுள்ள வார்த்தைகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.மத்தேயு நற்செய்தி 7: 24-25







All the contents on this site are copyrighted ©.