2011-03-05 14:19:56

அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் இறப்பால் வருந்தும் பாகிஸ்தான் ஆயர்களுக்கு கானடா ஆயர்கள் அனுதாபம்


மார்ச்05,2011. பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராக இருந்த அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் இறப்பால் வருந்தும் பாகிஸ்தான் ஆயர்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளனர் கானடா ஆயர்கள்
பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டி கொலை செய்யப்பட்டதற்கு கானடா பிரதமர் கண்டனம் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கானடா கத்தோலிக்க ஆயர்கள், கடந்த மாதத்தில் ஷபாஸ் பாட்டி கானடாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கானடா அமைச்சர்கள் அவரைச் சந்தித்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
சமய சுதந்திரத்தையும், மனச்சான்றின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி சிறுபான்மை சமூகங்களைக் குறிவைக்கும் தேவநிந்தனைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான ஷபாஸ் பாட்டியின் முயற்சிகள் ஊக்கப்படுத்தப்பட்டதையும் ஆயர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
கானடா நாட்டு வெளிநாட்டுக் கொள்கையில் சமய சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமய சுதந்திரமும், மனச்சான்றின் சுதந்திரமும் அனைத்து மனித சுதந்திரங்களுக்கும் மிக முக்கியமானது எனறு குறிப்பிட்டு இதனாலே கானடாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு கேட்பதாக ஆயர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் ஆன்ம சாந்திக்காக உரோமையிலுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள், இஞ்ஞாயிறு மாலைத் திருப்பலி நிகழ்த்தவுள்ளனர். இதனைத் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran தலைமை தாங்கி நடத்துகிறார்.







All the contents on this site are copyrighted ©.