2011-03-04 16:37:25

மார்ச் 05. வாழ்ந்தவர் வழியில்...........


1931 மார்ச் 5ம் தேதி காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்.
இந்த ஒப்பந்தத்தின்படி, காந்தி கீழ்ப்படியாமை இயக்கத்தை திரும்பப் பெற்றதுடன் 1931 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக கலந்துகொள்ளவும் சம்மதித்தார். சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் விடுதலையானார்கள். இருப்பினும், சில முக்கியமான புரட்சியாளர்கள் விடுதலை செய்யப்படாதது, பகத் சிங் மற்றும் அவருடைய இரண்டு தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை திரும்பப்பெறப்படாதது ஆகியவை காங்கிரஸிற்கு வெளியில் மட்டுமல்லாமல் காங்கிரஸிற்கு உள்ளேயும் அதற்கு எதிரான கொந்தளிப்புகளைத் தீவிரப்படுத்தியது.
இராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு அதற்காகக் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்ட பெருந்தலைவர் காமராஜும் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார்.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், உப்பு மீதான வரி நீக்கப்படவும், உப்பு தயாரிக்கும் உரிமையை இந்தியர்களுக்கும் வழங்கவும், சத்யாகிரகத்தில் ஈடுபட்டதற்காக பறிமுதல் செய்யப்பட்டவர்களின் உடமைகளை திருப்பி அளிக்கவும், வெளிநாட்டுப் பொருட்கள் மீதான அமைதிப்போராட்டங்களை அனுமதிக்கவும் இங்கிலாந்து அரசு இசைவு அளித்தது.
இதற்கிடையில், காந்தி கலந்து கொண்ட இரண்டாவது இலண்டன் வட்டமேசை மாநாடு 1931 ஆம் ஆண்டு டிசம்பரில் தோல்வியில் முடிந்தது. காந்தி இந்தியாவிற்குத் திரும்பி 1932 ஆம் ஆண்டு ஜனவரியில் கீழ்ப்படியாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முடிவெடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.