வத்திகானின் அனைத்துச் செய்திகளையும் திரட்டி அளிக்கும் ஒரே வலைதளம்
மார்ச் 03,2011. வத்திகான் வானொலி, வத்திக்கான் செய்தித்தாள் L'Osservatore Romano, FIDES
செய்தி நிறுவனம் போன்ற வத்திக்கானின் பல்வேறு தொடர்புத் துறைகளில் வெளியாகும் அனைத்துச்
செய்திகளையும் திரட்டி ஒரே வலைதளத்தில் அளிக்கும் முயற்சி இவ்வாண்டு உயிர்ப்புத் திருநாளுக்கு
முன் துவங்கும் என்று வத்திக்கான் தொடர்புத் துறைக்கான திருப்பீட அவை அறிவித்துள்ளது. இத்திருப்பீட
அவையின் தலைவரான பேராயர் Claudio Maria Celli இவ்வவையின் ஆண்டு கூட்டத்தில் இப்புதனன்று
பேசியபோது, இவ்வலைத் தளம் உயிர்ப்பு ஞாயிறான ஏப்ரல் 24க்கு முன் ஆங்கிலம், இத்தாலியம்
ஆகிய இரு மொழிகளில் துவங்கப்படும் என்றும் விரைவில் பிற மொழிகளில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
என்றும் அறிவித்தார். தொடர்புத் துறையில் ஒவ்வொரு நாளும் காணப்படும் மாற்றங்களுக்கு
ஈடுகொடுத்து திருச்சபை முயற்சிகளை மேற்கொள்வது நல்லதொரு அடையாளம் என்று பாப்பிறை சலேசியப்
பல்கலைக் கழகத்தின் தொடர்புத் துறை முதல்வர் அருள்தந்தை Franco Lever கூறினார்.