2011-03-03 15:23:25

பிலிப்பின்ஸ் ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு


மார்ச் 03,2011. பிலிப்பின்ஸ் நாட்டில் மக்களிடையே நிலவி வரும் ஆழ்ந்த பக்தியை வளர்ப்பதும், திருச்சபையின் படிப்பினைகளையும், நன்னெறி முறைகளையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதற்கு உதவுவதும் ஆயர்களின் பணிகளில் முக்கியமானதென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயர்கள் திருத்தந்தையை வத்திக்கானில் சந்திக்கும் Ad Limina கூட்டத்தில் இவ்வியாழன் காலை பிலிப்பின்ஸ் ஆயர்களைச் சந்தித்தபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஆயர்கள் மேற்கொள்ளும் பல பணிகளில் குடும்பங்களை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டுமென்றும், பெற்றோர்களே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என்பதால், அவர்களைச் சரியான திருமறைக் கோட்பாடுகளில் வழிநடத்துவது ஆயர்களின் கடமை என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
மேலும், ஆயர்களின் பணிகளில் அவர்களுக்குப் பக்கபலமாய் செயல்படும் குருக்களின் பயிற்சியிலும் ஆயர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, இளம் குருக்களை வழிநடத்த வயது முதிர்ந்த குருக்கள் வழிகாட்டிகளாய் விளங்கும் வழிகளையும் ஆயர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
“நன்மைசெய்வதில் மனம்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை செய்வோம்.” (கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 6:9) என்ற புனித பவுலடியாரின் சொற்களைப் பிலிப்பின்ஸ் ஆயர்களிடம் எடுத்துக் கூறிய திருத்தந்தை, அவர்களும் மனம் தளராமல் நற்பணிகளைச் செய்து இறையரசைக் கட்டியெழுப்பவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.