2011-03-03 15:30:35

சிறுபான்மைத் துறையின் அமைச்சர் Shahbaz Bhattiன் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தான் தலத்திருச்சபை மூன்று நாட்கள் துக்கம்


மார்ச் 03,2011. பாகிஸ்தானில் சிறுபான்மைத் துறையின் அமைச்சராகப் பணியாற்றிய Shahbaz Bhattiன் படுகொலையை வன்மையாகக் கண்டித்து பாகிஸ்தான் தலத்திருச்சபை மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிறது.
கொலையுண்ட அமைச்சரின் வீட்டிற்கு முன் இப்புதனன்று நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிறுபான்மையினர் தங்கள் நாட்டில் எல்லா உரிமைகளையும் அனுபவித்து வருகின்றனர் என்று வெறும் வாய் வார்த்தைகளாய் கூறிவரும் பாகிஸ்தான் அரசு, இந்நாட்டில் செயல்படும் தீவிரவாத அமைப்புக்களைக் கட்டுப்படுத்த உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர்கள் பேரவை வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் Bhattiன் படுகொலையை எதிர்த்து கிறிஸ்தவ பள்ளிகள், மற்றும் பிற நிறுவனங்கள் இப்புதன் முதல் மூன்று நாட்கள் மூடப்படும் என்று தலத்திருச்சபை அறிவித்துள்ளது.
இந்தப் படுகொலையை பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Ali Zardariயும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தேவநிந்தனை சட்டத்தை அகற்றுமாறு குரல் கொடுத்து வந்தவர்கள் பஞ்சாப் மாநில முதல்வர் Salman Taseerம், அமைச்சர் Shahbaz Bhattiம் என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்விருவரில், பஞ்சாப் ஆளுநர் Salman Taseer இவ்வாண்டு சனவரி 4ம் தேதி தனது மெய்க்காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மார்ச் 2 இப்புதனன்று அமைச்சர் Shahbaz Bhatti அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.