2011-03-02 15:34:45

இந்திய கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய தலித் அமைப்புக்கள் மாநிலங்கள் தேர்தல்களைப் புறக்கணிக்க முடிவு


மார்ச் 02,2011. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களைப் புறக்கணிக்கப் போவதாக இந்திய கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய தலித் அமைப்புக்கள் கூறியுள்ளன.
அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, வங்காளம், மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல் நாட்களை இந்திய தேர்தல் ஆணையம் இச்செவ்வாய்க் கிழமை அறிவிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், இவ்வமைப்புக்கள் தங்கள் கூட்டங்களை நடத்தி, செய்தியாளர்களிடம் தங்கள் முடிவுகளைத் தெரிவித்தனர்.
தலித் கிறிஸ்தவர்களின் தேசிய அவை மற்றும் அனைத்திந்திய Pasmanda Muslim Mahaz ஆகிய இரு அமைப்புக்களும் முன்னின்று நடத்திய இக்கூட்டத்தில், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த தலித்துக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் இத்தேர்தல்களைத் தாங்கள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.தமிழ் நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளுக்கு எவ்வகையிலும் ஆதரவு தராததால், அக்கட்சிக்கு தங்கள் வாக்கு இல்லையென்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பழங்குடியினர் மற்றும் தலித் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை காச்மன் ஆரோக்கியராஜ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.