2011-03-01 15:39:26

விவிலியத்
தேடல்


RealAudioMP3
நாம் வாசிக்கும் கதைகளில், பார்க்கும் திரைப்படங்களில் இறுதிக் காட்சிகள் விறுவிறுப்பாக அமையும். இவ்விறுதிப் பகுதியை "கிளைமாக்ஸ்" அல்லது "உச்சக்கட்டம்" என்று கூறுவோம். மகிழ்வான கதையென்றால், 'கிளைமாக்ஸ்' பகுதியில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, இறுதியில் 'வணக்கம்' அல்லது 'சுபம்' என்று முடியும். இதைக் காணும் நம் மனதில் ஒரு மகிழ்ச்சி, நிறைவு பிறக்கும்.

ஆனந்தமயமான ஒரு 'கிளைமாக்ஸ்' பகுதிக்கு இன்று நாம் வந்திருக்கிறோம். திருப்பாடல் 23ன் இறுதியான 6ம் திருவசனத்தில் இன்று நம் சிந்தனைகளைத் துவங்குகிறோம். இந்த இறுதித் திருவசனத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் நம்மை மகிழ்வில், மன நிறைவில் நிரப்பும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளை இப்போது ஒரு சிறு தியானமாகக் கேட்டுப் பயனடைய உங்களை அழைக்கிறேன்.

திருப்பாடல் 23 : 6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

திருப்பாடல் 23ஐ ஒரு முத்துமாலையாக நாம் உருவகித்துப் பார்த்தால், இந்த இறுதி வரிகள் அந்த முத்துமாலையின் நடுவில் கோர்க்கப்பட்டுள்ள ஒரு விலையுயர்ந்த பவளம் என எண்ணிப் பார்க்கலாம். இவ்விறுதி வரிகளில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் மனதில் இதமான, நிறைவான உணர்வுகளை எழுப்புகின்றது. திருப்பாடல் 23 முழுவதையும் ஒவ்வொரு நாளும், அல்லது அடிக்கடி வாசிப்பது பயனளிக்கும். அதிலும் முக்கியமாக, இந்த இறுதி வரிகளை மனப்பாடம் செய்து, உறங்கப் போகுமுன் நமக்குள் இரவுசெபம் போல சொல்லியபடியே உறங்கினால் நல்லது.
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

6ம் திருவசனத்தின் முதல் பகுதியில் நம் சிந்தனைகளை இன்று ஆழப்படுத்துவோம். இந்த வரியில் காணப்படும் ஒவ்வொரு சொற்றொடரும் பல சிந்தனைகளை எழுப்பும்.
உண்மையாகவே...
என் வாழ்நாள் எல்லாம்...
உம் அருள் நலமும் பேரன்பும்...
எனைப் புடைசூழ்ந்து வரும்.

எனைப் புடைசூழ்ந்து வரும் என்ற இறுதிச் சொற்றொடரில் நம் தேடலை ஆரம்பிப்போம். இறைவனின் அருளும் பேரன்பும் நம்மைப் புடைசூழ்ந்து வருவதைக் கற்பனை செய்து பார்ப்போம். இது உண்மை என்று நம்புவதற்கு, இந்த உண்மையை நமதாக்குவதற்கு முயல்வோம்.

திருப்பாடல் 23ன் இந்த வரியை Harold Kushner விவரிக்கும்போது, ஒரு கதையுடன் ஆரம்பிக்கிறார். ஓர் ஊரில் யூத மதத்தைச் சார்ந்த ஒரு முக்கிய புள்ளி வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோல் எல்லாருக்கும் தெரியும். தொழுகைக் கூடத்திற்கு வந்தாலும், அங்கும் நிலை கொள்ளாமல் தவிப்பார். தொழுகை முடிந்தும் முடியாமல், விரைந்து வெளியேறுவார். இவரைப் பார்த்துக் கொண்டிருந்த யூத குரு ஒரு நாள் இவரிடம், "நண்பரே, கொஞ்ச நேரம்... நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் எதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறீர்களே. ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டார்.
அந்த முக்கிய புள்ளி குருவிடம், "நான் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க விரும்புகிறேன். வெற்றி, செல்வம், புகழ் இவைகளைத் தேடி எப்போதும் நான் ஓடிக்கொண்டே இருப்பதால், இந்த அவசரம்." என்று கூறினார்.
"சரியான பதில் இது." என்று கூறிய குரு மேலும் தொடர்ந்தார்: "வெற்றி, செல்வம், புகழ் எல்லாம் உங்களுக்கு முன் செல்வதாக நினைக்கிறீர்கள். கைநழுவிப் போய்விடுமோ என்ற பயத்துடன் நீங்கள் எப்போதும் இவைகளைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி... கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்களேன். நீங்கள் துரத்திச் செல்லும் இவைகள் உங்களுக்கு முன் செல்லாமல், உங்கள் பின்னே உங்களைத் தேடிக் கொண்டு வரலாம் இல்லையா? நீங்கள் தேடி அலையும் வெற்றி, செல்வம் புகழ் ஆகிய பரிசுகளை எடுத்துக் கொண்டு கடவுள் உங்களைத் தேடி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அவர் உங்கள் வீடு தேடி வரும்போது, நீங்கள் இப்பரிசுகளைத் துரத்தியபடி வெளியில் அலைந்து கொண்டிருந்தால், கடவுள் வரும் நேரத்தில் நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள். கடவுள் உங்களைச் சந்திக்கமுடியாமல், உங்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரமுடியாமல் திரும்ப வேண்டியிருக்குமே!" என்று அந்த யூத குரு கூறினார். செல்வத்தையும் புகழையும் தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கும்போது, இறைவன் இவைகளையெல்லாம் நமக்குத் தருவதற்கு நம்மைத் தேடி வரக்கூடும் என்பது அழகான எண்ணம், மாற்றி சிந்திக்க வைக்கும் ஓர் எண்ணம்.

இறைவனின் அருள் நலமும், பேரன்பும் நம்மைப் பின் தொடர்ந்து வரும், புடைசூழ்ந்து வரும் என்ற வார்த்தைகளை இக்கோணத்தில் நினைத்துப் பார்க்கும்போது, அவசரமில்லாத, பரபரப்பில்லாத ஒரு வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்க்க முடிகிறது. இனம் புரியாத அமைதி உள்ளத்தில் உண்டாகிறது.

உலகின் அனைத்து நலன்களும் இவ்விதம் நம்மைப் பின் தொடருமா, நம்மைப் புடைசூழ்ந்து வருமா என்ற கேள்வி எழலாம்... இல்லை... உலக வாழ்க்கை அவ்வளவு எளிதான மலர் படுக்கை கிடையாது. எல்லா நலன்களும், எல்லா நேரங்களிலும் நம் வீடு தேடி வராது. அல்லது, கூரையைப் பிய்த்துக் கொண்டு உள்ளே கொட்டாது. பல நலன்களை நாம் தேடிப் போக வேண்டும். அவைகளை அடைய முயற்சிகள் எடுக்க வேண்டும், உழைக்க வேண்டும். வேறு பல நலன்கள் நம்மைத் தேடிவரும். பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். நாம் தேடிப்போகும் நலன்களும், நம்மைத் தேடி வரும் நலன்களும் கலந்ததுதான் வாழ்க்கை.

குழந்தைப் பருவத்திலேயே ஒரு சிலர் கலைத் திறமைகளுடன் விளங்குவதைப் பார்த்திருக்கிறோம். தங்களுடன் பிறந்த, அல்லது தங்களைத் தேடிவந்த கலையைத் தொடர்ந்து வளர்க்க இக்குழந்தைகள் ஒரு குருவைத் தேடிச் செல்ல வேண்டும், அல்லது மற்ற வழிகளைத் தேட வேண்டும். நல்ல குரல் வளம் உள்ளவர்களும், குளிர்ந்த ஆற்று நீரில் கழுத்து வரை நின்றபடியே சாதகங்கள் செய்வர் என்று கேள்விப்படுகிறோம். விளையாடும் திறமைகள் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறோம்.

ஓர் இளைஞனும், இளம் பெண்ணும் காதல் வயப்படுகின்றனர். உடல் அழகு என்ற ஈர்ப்பினால் அவர்களைத் தேடி வந்த காதலை அதே நிலையில் விட்டுவிட்டால், அக்காதல் வளர்வதற்கு வாய்ப்பு இருக்காது. ஈர்ப்பு நிலையைத் தாண்டி, பிற வழிகளில் தங்கள் காதலை வளர்க்கும், ஆழப்படுத்தும் வழிகளை இவர்கள் இருவரும் தேட வேண்டும்.

முயற்சிகள் எடுத்து நாம் தேடும் நன்மைகளையும், முயற்சிகள் ஏதுமின்றி நம்மை வந்தடையும் நன்மைகளையும் சரிவரக் கலந்தால் கட்டாயம் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.

இதைப் புரிந்து கொள்ள, Kushner கூறும் மற்றொரு எடுத்துக்காட்டு உதவும். ஓர் இளம்பெண் திருமண வயதைத் தாண்டிக் கொண்டிருந்தார். இன்னும் சரியான துணையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, தன் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் நடைபெறும் அத்தனை வைபவங்களிலும் வலிந்து சென்று கலந்து கொண்டார். பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் கொடுத்தார். துணையைத் தேடுவது எப்படி என்று புத்தகங்கள் படித்தார். இவரது தேடுதல் வேட்டை சரியான பலன் தரவில்லை. பல நாட்கள் மனம் சோர்ந்து, தூக்கம், பசி இவைகளை இழந்தார்.

ஒரு நாள் என்ன தோன்றியதோ தெரியவில்லை. துணை தேடும் வேட்டையை நிறுத்திவிட்டு, தன் வாழ்க்கையை எவ்வித பதட்டமும் இல்லாமல், Relaxed ஆகச் செலவிட முடிவு செய்தார். தனக்குப் பிடித்தமான வேலைகள், பொழுதுபோக்குகள் இவைகளில் அதிகம் ஈடுபட்டார். அவரது உள்ளம் மகிழ்வாய் இருந்ததால், அவர் உடல் நலனும் அதிகமானது. அவரது மகிழ்ச்சி, பூரிப்பு இவைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு சில இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். வண்ணத்துப் பூச்சி ஒன்றைத் துரத்தி களைத்து அமர்ந்த ஒருவரது தோள் மீது அந்த வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்த கதை நமக்கு நினைவிருக்கும் இல்லையா?

"புடைசூழ்ந்து வரும்" என்ற இந்தத் தமிழ் சொற்றொடர் அழகான எண்ணங்களை உருவாக்குவதை சிந்திப்போம். “உம் அருள் நலமும் பேரன்பும் என்னைத் தொடர்ந்து வரும்” என்று ஒரு சில விவிலியப் பதிப்புக்களில் நாம் இவ்வரியை வாசிக்கிறோம். தொடர்ந்து வரும் என்பதை விட, புடைசூழ்ந்து வரும் என்ற சொற்றொடர் இன்னும் உயர்ந்த எண்ணங்களை உருவாக்குகின்றன.

தலைவர்கள், அரசர்கள் இவர்களே மற்ற படை, பரிவாரங்கள் புடைசூழ வருவார்கள். இவ்விதம் வரும்போது, இரு அம்சங்கள் தெளிவாகும். புடைசூழ வருபவருக்கு மதிப்பு, மரியாதை அதிகம் உண்டு. பாதுகாப்பும் அதிகம் உண்டு.
இறைவனின் அருள் நலமும், பேரன்பும் நம்மைப் புடைசூழ்ந்து வரும்போது, நாம் பெறும் மரியாதை, பாதுகாப்பு எத்தகையது என்பதைத் தொடர்ந்து தேடுவோம்.







All the contents on this site are copyrighted ©.