2011-03-01 16:09:12

லிபியக் கத்தோலிக்கத் திருச்சபை செபம், பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது


மார்ச்01,2011. லிபியாவில் இடம் பெற்று வரும் வன்முறை போராட்டங்களையொட்டி அந்நாட்டுக் கத்தோலிக்கர் கட்டாயமாக வெளியேறிவரும் சூழலில் அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை மீண்டும் தூய்மைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அந்நாட்டில் மறைப்பணியாற்றும் அருட்பணியாளர் ஒருவர் கூறினார்.
திருச்சபைப் பணியாளர்கள் பிறரன்புப் பணிகளிலும் செபத்திலும் ஈடுபட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர் என்று டிரிப்போலி குருகுல முதல்வர் அருட்திரு டானியேல் ஃபாருஜா தெரிவித்தார்.
தற்சமயம் லிபியாவில் 15 அருட்பணியாளர்களும் 60 அருட்சகோதரிகளும் இரண்டு ஆயர்களின் தலைமையில் பணியாற்றி வருகின்றனர். லிபியாவின் தற்போதைய வன்முறைப் போராட்டத்திற்கு முன்னர் ஏறக்குறைய எண்பதாயிரம் கத்தோலிக்கர் இருந்தனர் என்றும் அக்குரு கூறினார்.
லிபியக் கத்தோலிக்கத் திருச்சபை முழுவதும் வெளிநாட்டவர் மற்றும் குடியேற்றதாரரைக் கொண்டதாகும். இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், கொரியா, போலந்து உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கர் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.