2011-02-28 15:31:40

“திறமையை வெளிப்படுத்த வயது தடையில்லை”


பிப்.28,2011. 'உலகினரின் பாராட்டைப் பெற வயது ஒரு தடையே அல்ல. திறமை இருந்தால், முயற்சி இருந்தால், வயதைப் பொருட்படுத்தாமல் மகுடம் சூட்டிப் பாராட்டி ஊக்குவிக்க இந்த உலகம் தயாராகவே இருக்கிறது’. இதற்கு அண்மையில் நாம் வாசித்த சில செய்திகள் எடுத்துக் காட்டாக நிற்கின்றன.
“இந்த உலகை ஐந்து நிமிடங்கள் அமைதியாக்கிய சிறுமி” என்ற ஒரு செய்தியை வலைத்தளத்தில் வாசித்திருப்பீர்கள். ஆம். சிறார் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் சார்பாக செவெர்ன் சுஜூக்கி (Severn Cullis Suzuki) என்ற கானடா நாட்டுப் பெண், தனது 12வது வயதில், உலகச் சுற்றுச் சூழல் மாநாட்டில் பேசிய போது அத்தனை தலைவர்களும் வாயடைத்து ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். சுஜூக்கி பேசினார்
“உலகில் பசி பட்டினியால் வாடும் சிறார் சார்பாக உலகத் தலைவர்களாகிய உங்களிடம் பேசுகிறேன். எங்களது வருங்காலத்திற்காகப் போராடுகிறோம். உங்களது வழிகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு ஐயாயிரம் மைல் பயணம் செய்து வரவேண்டியிருக்கிறது. நீங்கள் அனைவரும் எனது வயதில் இருக்கும் போது இந்த மாதிரியான சுற்றுச்சூழல் பாதிப்புக்களைச் சந்தித்தீர்களா? எங்களது குழந்தைகளுக்கு நாங்கள் எந்தவிதமான உலகை விட்டுச் செல்ல முடியும்? இப்போது வெப்பநிலை பாதிப்பால் அழிந்து போய்க் கொண்டிருக்கும் பல்வேறு உயிரினங்களை உங்களால் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. ஓசோன் துவாரத்தை அடைக்க முடியாது. ஆனால் உங்களால் மரங்களை நட முடியும்”
சென்னை, வேலம்மாள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி சிந்துஜாவுக்கு வயது பதின்மூன்று. ஆனால் அவர் சென்னையில் இயங்கும் 'செப்போன்’ (பொழுது போக்கு) எனும் அனிமேஷன் நிறுவனத்தின் ''honorary'' சி.இ.ஓ. (C.E.O) எனும் முக்கியமான பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்! சிந்துஜா சொல்கிறார்: “ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் நடந்த ஒரு போட்டிக்காகப் 'பூச்சிகளை வதைக்காதீர்’ என்ற தலைப்பில் அனிமேஷன் படம் எடுத்தேன். எனக்கு அதில் முதல் பரிசு கிடைத்தது. அதுதான் என்னுடைய ஆர்வத்தை அனிமேஷன் பக்கம் திருப்பிவிட்டது” என்று.
சென்னை மயிலாப்பூரிலுள்ள சிவசாமி கலாலயாவில் ப்ளஸ்-1 படிக்கும் மாணவி ஹரிணியை இந்த வருடக் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இந்திய அரசே அழைத்திருந்தது. ஹரிணி பத்தாம் வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் ஏ-1 கிரேடு அதாவது நூற்றுக்கு 91-க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கியதே இதற்குக் காரணம். இவ்வாறு மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியரில் இந்தியா முழுவதிலுமிருந்து பத்தாம் வகுப்பில் 25 பேர், பன்னிரண்டாம் வகுப்பில் 25 பேர், பல்கலைக்கழக அளவில் 50 பேர் என 100 பேரை அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது. ஹரிணி படிப்பில் மட்டுமல்ல, சினிமா மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் சுட்டிகளுக்கு பின்னணிக் குரல் கொடுக்கும் கில்லாடி. அண்மையில் ஒரு திரைப்படப் பாடலைப் பாடி இன்னும் பிரபலம் ஆகியிருக்கிறார்.
ஆனால் அன்பர்களே, இந்தச் சிறுமிகளின் வயதையொத்த பல “வளர்இளம் பருவத்தினர்” (adolescents) உலகில், குறிப்பாக வளரும் நாடுகளில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். UNICEF என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தைநல நிதி நிறுவனம், "2011 உலகின் சிறாரின் நிலைமை" என்று கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தப் பருவத்தினர் பற்றி கூறியுள்ளது. 150க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைக் கொண்ட யூனிசெப் நிறுவனத்தின் உதவி இயக்குனர் Hilde F. Johnson, இந்த அறிக்கையை நிருபர் கூட்டத்தில் வெளியிட்டு இன்றைய வளர்இளம் பருவத்தினரின் நிலைமையைப் புள்ளி விபரங்களுடன் விளக்கினார்.
இன்றைய உலகில் தொடர் சங்கிலியாகப் பாதித்துக் கொண்டிருக்கும் வறுமையின் கொடுமையை அகற்றி உறுதியான, சமத்துவம் நிறைந்த உலகைச் சமைக்க விரும்பினால் வளர்இளம் பருவத்தினர் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்தப் பூமிப்பந்தில் ஏறக்குறைய ஐந்து பேருக்கு ஒருவர் அதாவது 120 கோடிப் பேர் “வளர்இளம் பருவத்தினர்”. இவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். இந்நாள்வரை இவர்களில் பெரும்பாலானோர் கல்விபெற வாய்ப்புகளின்றி, நலவாழ்வு வசதியின்றி, பின்தங்கிய நிலையிலே இருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பல அமைப்புகள், பல நிறுவனங்கள் மற்றும் பல தனியாட்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் நமக்கு மிகவே அதிர்ச்சியூட்டுகின்றன.
“உலகின் “வளர்இளம் பருவத்தினரில்” ஏறத்தாழ பாதிப்பேர் நடுத்தரப்பள்ளிக்குச் செல்வதில்லை. ஐந்துக்கும் பதினான்கு வயதுக்கும் இடைப்பட்ட 15 கோடிச் சிறார் குழந்தைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவரிக்க முடியாத எண்ணக்கையில் ஆண்டுதோறும் வியாபாரம் செய்யப்படும் இவர்களில் 10 இலட்சம் பேர் தரமற்ற வேலைக்கும் பாலியல் தொழிலுக்குமெனப் பயன்படுத்தப்படுகின்றனர். படைவீரர்கள், உளவாளிகள், தூது சொல்பவர்கள், பாலியல் அடிமைகள் என ஏழு கோடிப் பேர் ஆயுதம் தாங்கிய குழுக்களோடு வேலை செய்கின்றனர். சுமார் ஏழு கோடிச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்புகள் முடமாக்கப்பட்டுள்ளன. சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 15க்கும் 19 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகளில் இரண்டு பேருக்கு ஒருவர் வீதம் நடுத்தரப் பள்ளிக்குச் செல்வதில்லை. ஐந்து பேருக்கு ஒருவர் வீதம் திருமணமாணமானவர்கள். ஐந்து பேருக்கு நான்கு பேர் வீதம் எய்ட்ஸ் நோய் பற்றித் தெரியாமல் இருக்கின்றனர்”.
யூனிசெப் அதிகாரி ஹில்டே மேலும் சொல்கிறார் : “தடுக்கக்கூடிய நோய்களால் ஒவ்வொரு நாளும் இறக்கும் ஐந்து வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளில் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 1990ல் 34 ஆயிரமாக இருந்த இவ்வெண்ணிக்கை 2009ல் 22 ஆயிரமாகக் குறைந்தது. எடுத்துக்காட்டுக்குப் பிரேசில் நாட்டில் 1998க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் 26 ஆயிரத்துக்கு அதிகமான குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அதே பிரேசிலில் அதே பத்தாண்டுகளில் 15க்கும் 19க்கும் இடைப்பட்ட 81 ஆயிரம் வளர்இளம் பருவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். சிறாரை அவர்களின் முதல் பருவத்தில் கஷ்டப்பட்டு காப்பாற்றி அவர்களின் அடுத்த பருவத்தில் அவர்களை இழக்கவா இவ்வளவு முயற்சி எடுக்கிறோம்” என்று.
இந்த வளர்இளம் பருவத்தினர் வரிசையாக எதிர்நோக்கும் ஆபத்துக்களையும் யூனிசெப் அறிக்கை உலகினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வயதினரில் நான்கு இலட்சம் பேர் ஆண்டுதோறும் காயங்களால் இறக்கின்றனர். இந்த வயதுச் சிறுமிகள் இறப்பதற்கு கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பும் முக்கிய காரணமாகின்றன. இவை மட்டுமின்றி, புவி வெப்பமடைந்து வருதல், தற்போதைய வேலைவாய்ப்பு நிலவரம் போன்ற விவகாரங்களும் இந்த பருவத்தினரின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். அதேசமயம் இந்த வளர்இளம் பருவம், எளிதில் வடுப்படும் காலமாக இருந்தாலும் வாய்ப்புக்களின் பருவமாகவும் இருக்கின்றது. சிறப்பாக, வளர்இளம் பருவச் சிறுமிகளின் வாழ்க்கையில் இது உண்மையாகின்றது. ஒரு சிறுமி அந்தப் பருவத்தில் இன்னும் அதிகமானக் கல்வியைப் பெற்றால் அவள் தனது திருமணத்தையும் தாய்மை அடையும் காலத்தையும் தள்ளிப் போட முடியும். ஆதலால் இந்த வளர்இளம் பருவத்தினர் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு எல்லாவிதமான வாய்ப்புக்களும் வழங்கப்படுமாறும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிப்பதற்கும் நெருக்கடிகளிலிருந்து வெளிவருவதற்கும் உதவுமாறும் சமூகங்களைக் கேட்டுள்ளது யூனிசெப் நிறுவனம். தேசிய அளவில் இளையோர் அவைகள், கழகங்கள், போன்றவற்றை உருவாக்கி இந்தப் பருவத்தினரின் குரல்கள் கேட்கும்படிச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அழைப்பு விடுக்கும் யூனிசெப், இவ்விவகாரத்தில் நாடுகளுடன் இணைந்தும் வேலை செய்கின்றது. 2006ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தப் பருவத்தினரில் சுமார் 70 விழுக்காட்டினர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று யூனிசெப்பின் உதவியுடன் அம்மாநிலத்தில் 13 ஆயிரம் பள்ளிகளில் பத்துக்கும் பத்தொன்பது வயதுக்கும் இடைபட்ட சிறுமிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தும் சிறுமிகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. அன்பர்களே, உங்கள் குடும்பங்களிலும் நீஙகள் பணி செய்யும் இடங்களிலும் உங்கள் சமூகங்களிலும் இந்த “வளர்இளம் பருவத்தினர்” சந்திக்கும் உடல் சார்ந்த, உளம் சார்ந்த பிரச்சனைகளைக் களைய அல்லது அவர்கள் வாழ்வை மேலும் வளமாக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன? இந்த வயதினரை இலட்சியவாதிகளாக உருவாக்கினால் எப்படி இருக்கும்?
அந்த ஊரில் இருக்கும் அந்த ஆசிரமத்தைச் சுற்றி நிறைய மரம் செடி கொடிகளும் குறிப்பாக நிறைய மா மரங்களும் இருந்தன. அந்த ஆசிரமத்தைக் கடந்துதான் மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவ்வழியே காலையிலும் மாலையிலும் மாணவர்கள் செல்வதைக் கவனித்துக் கொண்டே இருந்தார் அந்தத் துறவி. தினமும் மாலையில் மாணவர்கள் மாமரங்களில் கல் எறிந்து பழம் எடுத்துக் கொண்டுதான் வீடு செல்வார்கள். ஆனால் அவர்கள் காலையில் அந்த மரங்களைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. இதைக் கவனித்துக் கொண்டிருந்த துறவி, ஒருநாள் ஒரு மாணவனை அழைத்துக் கேட்டார். தம்பி, காலையில் ஒழுங்காக அமைதியாகப் போகிறீர்கள், ஆனால் மாலையில் அப்படி இல்லையே ஏன்? என்றார். அதற்கு அவன், காலையில் சரியான நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் ஆசிரியர் அடிப்பார். ஆனால் மாலையில் அப்படி இல்லை. வீட்டுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம். அதனால்தான் மாம்பழம் அடிச்சு எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போகிறோம் எனச் சொன்னான்.
விவேகானந்தர் சொல்வார் .... வாழ்க்கையில் இலட்சியம் கொண்டிருப்பவன் ஆயிரம் தவறுகளைச் செய்தால்.. இலட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான் என்று.
வளர்இளம் பிள்ளைகளே, வாழ்க்கையில் இலட்சியத்தோடு செயல்படுங்கள். உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் உங்கள் திறமையைப் பார்த்து மகுடம் சூட்ட இந்த உலகம் தயாராக இருக்கிறது’







All the contents on this site are copyrighted ©.